Published : 10 Jul 2020 03:46 PM
Last Updated : 10 Jul 2020 03:46 PM

மருத்துவர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியம் கொடுக்க நிதி இல்லை, டெண்டர்களுக்கு ஒதுக்க ஆயிரக்கணக்கான கோடி நிதி மட்டும் உள்ளதா?- ஸ்டாலின் விமர்சனம் 

மக்களுக்குத் தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்து, உழைத்த மருத்துவர்களுக்கு ஓய்வூதியம் கொடுக்க நிதி இல்லை என்று கூறுவது, ஆனால் டெண்டர்களுக்கு பல ஆயிரம் கோடி நிதி ஒதுக்க முடிகிறது, ஓய்வூதியம் இல்லை என மறுப்பது மாபாதகச் செயல் என திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை.

“தற்போதைய நிதி நிலைமை'யைக் காரணம் காட்டி, முதல்வரை முன்நிறுத்தும் விளம்பரங்களையோ - அவசியமில்லாமல் கமிஷனுக்காக அவசரப்படுத்தப்படும் டெண்டர்களுக்கோ நிதி ஒதுக்குவதைத் 'தள்ளி வைக்க' முடியாத நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் கீழ் உள்ள நிதித்துறை, 23.10.2009-க்கு முன்பு ஓய்வு பெற்ற மருத்துவர்களுக்கு உயர்த்தி வழங்கப்பட்ட ஓய்வூதியத்தை மட்டும் ரத்து செய்வது கடும் கண்டனத்திற்குரியது.

அரசு ஊழியர்களான மருத்துவர்களுக்கு அநீதியையும் - அமைச்சர்கள் கமிஷனுக்காகவே விடும் டெண்டர்களுக்கு நிதியையும் அளிப்பது வருத்தமளிக்கிறது. தற்போது கரோனா நேரத்தில் மருத்துவர்கள் 'முன்னணிக் கள வீரர்களில்' முக்கியமாக இருக்கிறார்கள். இதுபோல்தான் ஓய்வு பெற்ற மருத்துவர்களும் தமிழக மக்களுக்காகத் தன்னலமற்று பணியாற்றியவர்கள்.

"அவர்களுக்கான ஓய்வூதிய உயர்வை இப்போதுள்ள நிதி நிலைமையில் சமாளிக்க முடியாது" என்றால், "டெண்டர்களுக்கு 1000 கோடி, 10 ஆயிரம் கோடி ரூபாய் என்று அனுமதியளிப்பதற்கு" எங்கிருந்து நிதி வருகிறது?

அரசுக்கு - குறிப்பாக, மக்களுக்குத் தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்து, உழைத்த மருத்துவர்களுக்கு ஓய்வூதியம் கொடுக்க நிதி இல்லை என்று கூறுவது மாபாதகச் செயல் என்பதை அதிமுக அரசு உணர வேண்டும்.

23.10.2009-க்கு முன் ஓய்வு பெற்ற மருத்துவர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்தை ரத்து செய்யும் முடிவினை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்”.

இவ்வாறு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x