

பல மாதங்கள் ஊதிய நிலுவை உள்ள சூழலில் ஒரு மாத ஊதியத்துக்கு கோப்பு அனுப்பியும் அதற்கு ஆளுநர் ஒப்புதல் தராததால் ராஜ்நிவாஸ் அருகே குடும்பத்துடன் தனிமனித இடைவெளியுடன் பாப்ஸ்கோ ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் பல அரசு சார்பு நிறுவனங்களில் பல மாதங்களாக ஊதியம் தரப்படவில்லை. அவர்கள் குடும்பத்தில் உள்ளோர் தனியாரிடம் தினக்கூலி வேலையோ, சாலையோர டிபன் கடையோ அமைத்து செய்து வந்த பணிகளும் கரோனாவால் முடங்கியுள்ளதால் சாப்பிடக்கூட முடியாத சூழலில் தவிப்பதாக குறிப்பிடுகின்றனர்.
குறிப்பாக அரசு சார்பு நிறுவனமான பாப்ஸ்கோவில் ஆயிரக்கணக்கானோர் பணியில் உள்ளனர். இவர்களுக்கு 32 மாதங்களாக ஊதியம் தரவில்லை. கடந்த பட்ஜெட்டில் ரூ.7 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இதுவரை தரவில்லை.
இந்நிலையில், ஆளுநர் மாளிகை அருகேயுள்ள தலைமை தபால் நிலையம் அருகே ஏராளமான பாப்ஸ்கோ ஊழியர்கள் குடும்பத்துடன் இன்று (ஜூலை 10) திரண்டனர்.
அவர்கள் கூறுகையில், "கரோனா ஊரடங்கை ஒட்டி ஒரு மாத ஊதியத்துக்காக ரூ.1.5 கோடி ஒதுக்கீடு செய்து அரசு தரப்பில் கோப்பு தயாரிக்கப்பட்டது. முதல்வர் தொடங்கி நிதித்துறை செயலர் வரை ஒப்புதல் தந்து அக்கோப்பு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், ஊதியத்துக்கு பதிலாக பாப்ஸ்கோ மதுபான கடைகளுக்கு வரி கட்ட கிரண்பேடி ஒப்புதல் தந்துள்ளார். அதனால் ஆளுநரை கண்டித்து, உடன் ஊதியம் தரக்கோரி குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபடுகிறோம்" என்றனர்.
தனிமனித இடைவெளியை கடைபிடித்து ஆளுநர் மாளிகை அருகேயுள்ள தலைமை தபால் நிலையம் அருகே போராட்டம் நடத்தினர். காவல்துறையினரும் நூற்றுக்கானக்கானோர் குவிக்கப்பட்டனர். பறக்கும் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறுகையில், "பாப்ஸ்கோவில் பணிபுரியும் அனைவரும் பாதிப்பில் உள்ளனர். குறிப்பாக கணவரை இழந்த பெண்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தேவையான உணவை கூட வாங்கி தர முடியாத சூழலில் உள்ளனர்" என்றனர், வேதனையுடன்.