Published : 10 Jul 2020 01:19 PM
Last Updated : 10 Jul 2020 01:19 PM

தமிழகம் வந்துள்ள மத்திய மருத்துவக்குழு முதல்வருடன் ஆலோசனை 

தமிழகத்தில் மாவட்டங்களில் அதிகரிக்கும் தொற்றுப் பரவல், தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்த சென்னை வந்த மத்திய உயர்மட்டக் மருத்துவக்குழு இன்று முதல்வருடன் ஆலோசனை நடத்தியது.

கரோனா தொற்று தமிழகத்தில் வேகமாக அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில் சென்னையில் மட்டுமே ஆயிரக்கணக்கில் தொற்று எண்ணிக்கை இருந்தது. மற்ற 36 மாவட்டங்களில் 10, 20 என்கிற எண்ணிக்கையிலேயே இருந்தது. இந்நிலையில் சென்னையில் தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது சென்னையிலிருந்து பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு இடம் பெயர்ந்தனர்.

அதேபோன்று ஊரடங்குத் தளர்வு காரணமாக ரயில், விமானப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. வெளிநாடுகள், வெளிமாநிலங்களிலிருந்து பொதுமக்கள் தமிழகம் திரும்பியதால் மாவட்டம் முழுவதும் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்தது. கடந்த ஒரு மாதத்திற்குள் மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை நான்கு இலக்கத்தை அடைந்துள்ளது.

தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. சென்னையில் தொற்று எண்ணிக்கை சமீபத்தில் குறைந்தாலும் 72,500 ஆக உலக அளவில் கரோனா தொற்றுள்ள நகரங்களில் சென்னை உள்ளது. சமீபகாலமாக சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களில் வேகமாகத் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

உலக அளவில் கொலம்பியாவைப் பின்னுக்குத் தள்ளி 19-வது இடத்தில் தமிழகம் உள்ளது. இந்திய அளவில் 2-ம் இடத்தில் தமிழகம் உள்ளது. நேற்றைய எண்ணிக்கை 1,26,581. உலக அளவில் ஸ்வீடனுக்கு அடுத்தபடியாக சென்னை 26-வது இடத்தில் உள்ளது.

தமிழகத்தில் இன்று தொற்று கண்டறியப்பட்ட 37 மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு 7,386, திருவள்ளூர் 5,877, மதுரை 5,299, காஞ்சிபுரம் 3,038, திருவண்ணாமலை 2,758, வேலூர் 2,344, கடலூர் 1,480, தூத்துக்குடி 1,754, ராமநாதபுரம் 1,754, சேலம் 1,502, கள்ளக்குறிச்சி 1,539, விழுப்புரம் 1,370, ராணிப்பேட்டை 1,404, திருநெல்வேலி 1,409, தேனி 1,387, திருச்சி 1,170, விருதுநகர் 1,595, கோயம்பத்தூர் 1026 ஆகியவை 1000 எண்ணிக்கைக்கு மேல் உள்ள மாவட்டங்கள் ஆகும்.அனைத்து மாவட்டங்களும் 100 என்கிற தொற்று எண்ணிக்கையை இன்று கடந்துவிட்டன.

மதுரையும், திருவள்ளூரும் மிக வேகமாக 5,000 என்கிற எண்ணிக்கையைக் கடந்துள்ளது. செங்கல்பட்டு 7,000 என்கிற எண்ணிக்கையைக் கடந்துள்ளது. இந்நிலையில் பல மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வுடன் உள்ளது. தமிழகத்தில் தொற்று எண்ணிக்கை அதிகரித்த அளவுக்கு குணமடைவோர் எண்ணிக்கையும் 57 சதவீதம் அளவுக்கு உள்ளது. தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவல் குறித்து ஆய்வு செய்ய, மத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலர் ஆர்த்தி அஹுஜா தலைமையிலான 7 பேர் கொண்ட மத்திய உயர்மட்ட மருத்துவக்குழு 8-ம் தேதி மாலை சென்னை வந்தது.

இந்த மத்திய உயர்மட்டக் குழுவில் கூடுதல் செயலர் ஆர்த்தி அஹுஜா தவிர, இணைச் செயலர்கள் மத்திய அரசின் தமிழகத்துக்கான சுகாதாரக் கண்காணிப்பு அலுவலர் ராஜேந்திர ரத்னு, மின்னணு மருத்துவ பதிவுகள் (EMR) இயக்குனர் டாக்டர் ரவீந்திரன், நோய்க் கட்டுப்பாட்டுக்கான தேசிய மையம் (என்.சி.டி.சி) துணை இயக்குனர் சுஹாஸ் தந்தோர், நோய்க் கட்டுப்பாட்டுக்கான தேசிய மையம் (என்.சி.டி.சி) தொற்று நோய் நிபுணர் டாக்டர் பிரவீன், ஜிப்மர் மருத்துவர்கள் ஸ்வரூப் சாஹு, சதீஷ் ஆகியோர் உள்ளனர்.

இந்தக் குழுவினர் நேற்று மாலை செங்கல்பட்டு அரசு மருத்துவமனை, கிண்டியில் அமைக்கப்பட்டுள்ள நவீன கோவிட் சிகிச்சை மையம் உள்ளிட்டவற்றைப் பார்வையிட்டனர். இன்று காலை சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஆய்வு நடத்தினர். அவர்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் சிகிச்சை முறைகளை விளக்கிக் கூறினர்.

பின்னர் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடன் மருத்துவக்குழுவினர் ஆலோசனை நடத்தினர். இதில் அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்ளிட்ட மாநகராட்சி உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மாநகராட்சி அலுவலர்களுடனான ஆலோசனைக்குப் பின் மருத்துவக்குழுவினர் நோய்த்தொற்று அதிகம் பரவலாக உள்ள தமிழகத்தின் 10 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினர். இந்நிலையில் இன்று காலை முதல்வர் பழனிசாமியுடன் மத்திய மருத்துவக்குழுவினர் ஆலோசனை நடத்திவருகின்றனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலர் சண்முகம், சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் மற்றும் துறை உயர் அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

தங்கள் ஆய்வுகளை முடித்துக்கொண்டு இன்று மாலை குழு தமிழகத்திலிருந்து புறப்பட்டுச் செல்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x