Published : 10 Jul 2020 01:12 PM
Last Updated : 10 Jul 2020 01:12 PM

கிர்கிஸ்தான் நாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழக மாணவர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்- தினகரன் கோரிக்கை

டிடிவி தினகரன்: கோப்புப்படம்

சென்னை

கிர்கிஸ்தான் நாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழக மாணவர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, டிடிவி தினகரன் இன்று (ஜூலை 10) தன் ட்விட்டர் பக்கத்தில், "கிர்கிஸ்தான் நாட்டில் மருத்துவம் படிப்பதற்குச் சென்ற நூற்றுக்கணக்கான தமிழக மாணவர்கள் கரோனா பாதிப்பால் அங்கே சிக்கித்தவிப்பதாக வரும் செய்திகள் கவலையளிக்கின்றன. இவர்களைப்போன்றே தமிழகத்தை சேர்ந்த பலர் வெளிநாடுகளில் வேலையின்றியும், அடிப்படை வசதிகள் இல்லாமலும் தவிக்கின்றனர்.

வெளிநாடுகளில் தவிக்கும் தங்கள் மாநிலத்தைச் சேர்ந்தவர்களை மீட்கும் பணியில் தமிழக அரசு போதிய கவனம் செலுத்தவில்லை என்று தொடக்கம் முதலே கூறப்பட்டு வரும் புகார்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இப்போதாவது காது கொடுத்து கேட்க வேண்டும்.

வெளிநாடுகளில் தவித்து வருபவர்களை உடனடியாக தமிழகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து செய்ய வேண்டிய இப்பணியில் தமிழக அரசும், அதிக எம்.பி.க்களை வைத்திருக்கும் திமுகவும் பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது" என பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x