

திருவனந்தபுரம் கோட்டத்தில் இயக்கப்படும் சில ரயில்களின் இயக்கத்தை மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது ரயில்வே துறை.
இதன்படி, கோட்டயம் வழியாக இயங்கிக் கொண்டிருந்த கொச்சுவேலி – டேராடூன் (22659-226660) வழித்தடத்தை மாற்றி ஆலப்புழா வழியாக இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், திருவனந்தபுரம் - நிஜாமுதீன் (22655-22656) ரயில் எர்ணாகுளத்துடன் நிறுத்தப்பட்டு இனி எர்ணாகுளம் - நிஜாமுதீன் ரயிலாக இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் திருவனந்தபுரத்திலிருந்து நள்ளிரவு 1:00 மணிக்குப் புறப்பட்டு இயக்கப்பட்டு வந்தது. இதனால் இந்த ரயில் திருவனந்தபுரம் - எர்ணாகுளம் மார்க்கத்தில் கூட்டம் இல்லாமல் காலியாக அதிக நஷ்டத்துடன் இயங்கி வந்தது. ஆகவே, இந்த ரயிலை எர்ணாகுளத்துடன் நிரந்தரமாக நிறுத்திவிட்டனர். இதுபோன்ற மாற்றங்களை குமரி மாவட்ட ரயில்வே வழித்தடத்திலும் பயணிகளின் வசதிக்காக செய்யவேண்டும் என குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் தலைவர் எஸ்.ஆர்.ஸ்ரீராம் நம்மிடம் பேசுகையில், “திருநெல்வேலியிருந்து நாகர்கோவில் டவுன், திருவனந்தபுரம், கோவை, ஈரோடு வழியாக பிலாஸ்பூர்க்கு வாராந்தர ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த ரயில் திருநெல்வேலியில் இரவு 1:15 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் டவுன் நிலையத்துக்கு இரவு 2:30 மணிக்கும், திருவனந்தபுரத்துக்கு 4:25 மணிக்கும் செல்கிறது. இந்த ரயில் மிகவும் மோசமான கால அட்டவணையுடன் இயங்கும் காரணத்தால் திருநெல்வேலி – திருவனந்தபுரம் வரையிலும் காலியாக இயங்கி அதிக நஷ்டத்தை ஏற்படுத்துகின்றது.
இந்த ரயில் முழுக்க முழுக்கக் கேரளப் பயணிகளுக்காகவே இயக்கப்படுகிறது. இந்த ரயிலால் குமரி, நெல்லை மாவட்டப் பயணிகளுக்கு எந்தப் பயனும் இல்லை. ஆகவே, இந்த ரயிலை கொச்சுவேலியுடன் நிரந்தரமாக நிறுத்த வேண்டும். இதற்குப் பதிலாக கொச்சுவேலியிருந்து மங்களூர், கோவா, மும்பை வழியாக கொங்கன் பாதையில் இயங்கும் கொச்சுவேலி - ஸ்ரீகங்காநகர் (16311_16312) வாராந்தர ரயில், திருவனந்தபுரம் - விராவல் (16333_16334) வாராந்தர ரயில் ஆகிய இரண்டையும் திருநெல்வேலி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும்.
இப்படிச் செய்தால் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டப் பயணிகள் குறைந்த பயண தூரம் வழித்தடம் வழியாக மும்பை செல்வதற்கு அதாவது திருநெல்வேலி – ஜாம்நகர் (ஹாப்பா) ரயிலைப் போன்ற ரயில் வசதி கிடைக்கும். குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டப் பயணிகள் மும்பைக்குச் செல்ல போதிய ரயில் வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இப்படி மாற்றம் செய்வதால் இவர்களில் பிரச்சினை தீர்வதுடன் ரயில்வே துறைக்கும் அதிக வருவாயும் கிடைக்கும்.
நாகர்கோவில் - ஷாலிமர் வாராந்திர ரயில் 2001-ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டிலும், கன்னியாகுமரி – திப்ருகர் ரயில் 2011-ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டிலும் அறிவிக்கப்பட்டு இயங்கி கொண்டிருக்கின்றன. இந்த இரண்டு ரயில்களும் கேரளப் பயணிகளுக்காகவே இயக்கப்படுகின்றது. திருவனந்தபுரம் ரயில் நிலையத்தின் இடநெருக்கடியைச் சமாளிப்பதற்காக இந்த ரயில்களை நாகர்கோவிலுக்கு அனுப்பி இங்கு நிறுத்திவைத்து பராமரிக்கப்படுகின்றன. நெல்லையும், குமரியும் மலையாளிகளுக்கு ரயிலைப் பராமரித்து நிறுத்தி வைக்கும் மையமாக மட்டுமே பயன்படுகிறதே தவிர தமிழர்களுக்கு அது ரயில் நிலையமாகப் பயன்படுவதில்லை. இந்த ரயில்களை நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் வழியாக இயக்கிவிட்டு, வேறு புதிய ரயில்களை நாகர்கோவிலில் இருந்து இயக்க இடமில்லாதபடி செய்துவிடுகின்றனர் ரயில்வே அதிகாரிகள்.
ஆகவே, திருவனந்தபுரம் - நிஜாமுதீன் ரயிலை எர்ணாகுளத்துடன் நிறுத்தியது போன்று நாகர்கோவில் - ஷாலிமர், கன்னியாகுமரி – திப்ருகர் ஆகிய இரண்டு ரயில்களையும் கொச்சுவேலியுடன் நிறுத்திவிடவேண்டும். இவ்வாறு நிறுத்திவிட்டு சென்னை தாம்பரத்திலிருந்து திப்புகருக்கு இயக்கப்பட்டு வரும் வாராந்தர ரயிலை (15929_15930) மதுரை வழியாக கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். ஷாலிமர் ரயிலுக்கு மாற்று ரயிலாக திருச்சியிலிருந்து சென்னை வழியாக ஹவுரா செல்லும் வாரம் இருமுறை ரயிலை (12663_12664) திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும்.
இவ்வாறு இந்த ரயில்களை இயங்கும்போது குமரி மாவட்ட மக்களுக்கு மாநிலத் தலைநகரான சென்னைக்குச் செல்லக் கூடுதல் ரயில் வசதி கிடைக்கும். ரயில்வே துறைக்கும் அதிக வருவாய் கிடைக்கும்.
கன்னியாகுமரி – திப்ருகர் ரயிலைத் தினசரி ரயிலாக மாற்றி இயக்க ரயில்வே துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்குக் கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்கிறது. இதையும் மீறி இந்த ரயிலை இயக்கும்பட்சத்தில் நீதிமன்றத்தை நாடி இந்த ரயிலை திருநெல்வேலி, மதுரை வழியாக இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.