தமிழகம் போல் மாதந்தோறும் அரிசி, பருப்பு மளிகை தரக்கோரி புதுச்சேரி சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் தர்ணா

அதிமுக எம்எல்ஏக்கள் தர்ணா
அதிமுக எம்எல்ஏக்கள் தர்ணா
Updated on
1 min read

கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களை புதுச்சேரி அரசு கண்டுகொள்ளவில்லை என குற்றம்சாட்டியும் தமிழகம் போல் மாதந்தோறும் அரிசி, பருப்பு, மளிகை தரக்கோரியும் சட்டப்பேரவை வளாகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.

புதுவையில் கரோனா தொற்று நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. கரோனா தொற்றால் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர். 600-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவை காங்கிரஸ் அரசு ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.2,000 ஆரம்பகட்டத்தில் நிவாரணம் வழங்கியது. ஆனால், ஊரடங்கு 4 மாதமாக நீடித்து வருகிறது. தொழிற்சாலைகள், வர்த்தக, வணிக நிறுவனங்கள் முழுமையாக இயங்கவில்லை. தொழிலாளர்களும் பாதியாக குறைக்கப்பட்டுள்ளனர். இதனால் வேலையின்றி புதுவை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மேலும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், இன்று (ஜூலை 10) காலை அதிமுக எம்எல்ஏக்கள் அன்பழகன், பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் சட்டப்பேரவை வளாகத்திற்கு வந்தனர். அவர்கள் கைகளில் பதாகைகளை வைத்திருந்தனர். அதில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5,000 நிவாரணம் வழங்க வேண்டும், தமிழகம் போல மாதந்தோறும் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்க வேண்டும், கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த நிதியும் வழங்காத காங்கிரஸ் அரசை கண்டிக்கிறோம் என குறிப்பிட்டிருந்தனர்.

எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்கு செல்லும் மைய மண்டபத்தின் படிக்கட்டுகளில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in