Published : 10 Jul 2020 12:49 PM
Last Updated : 10 Jul 2020 12:49 PM

தேசப்பாதுகாப்பை கருத்தில்கொண்டு சேது சமுத்திர திட்டப் பணிகளை மீண்டும் தொடங்குக; பிரதமர் மோடிக்கு டி.ஆர்.பாலு எம்.பி. கடிதம்

தேசப்பாதுகாப்பை கருத்தில்கொண்டு சேது சமுத்திர திட்டப் பணிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என, நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, பிரதமர் மோடியை வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, டி.ஆர்.பாலு இன்று (ஜூலை 10) பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம்:

"தமிழக மக்களின் மிக முக்கியத்துவம் வாய்ந்த சேது சமுத்திர திட்டப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, இக்கடிதத்தை எழுதுகிறேன். கடிதம் சற்றே நெடியதாக இருப்பினும், அதன் முக்கியத்துவத்தைக் கருத்தில்கொண்டு உரிய பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ள வேண்டுகிறேன்.

அண்மையில் ஆக்கிரமிப்பு மனோபாவம் கொண்ட நமது அண்டை நாடான சீனாவுடன் ஏற்பட்ட மோதலில் திமுக மத்திய அரசுடன் உறுதியாக நின்றது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இதுதொடர்பாக தங்கள் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் திமுகவின் ஆதரவை தெள்ளத்தெளிவாக எடுத்துரைத்தார்.

லடாக் எல்லையில் அண்மையில் சீனப் படைகளின் ஆத்துமீறிய மோதலை தொடர்ந்து இந்தியா வடமேற்கில் பஞ்சாபில் இருந்து வடகிழக்கில் அருணாசல பிரதேசம் வரை உள்ள நீண்ட நெடிய எல்லை மட்டுமல்லாமல் இந்தியாவின் தென்பகுதி எல்லையான தமிழக கடலோர எல்லை பகுதிகளிலும் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் உருவாகும் நிலை உள்ளதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

குறிப்பாக, தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையிலான சேது சமுத்திர கடல் பகுதியில் தேச பாதுகாப்புக்கு எதிரான அச்சுறுத்தல் அதிகம் உள்ளது என்பதை இந்திய அரசு உணர வேண்டும். காரணம், சீனா இலங்கையுடன் வேகமாக நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு வருவது இந்திய பாதுகாப்பு நலனுக்கு என்றைக்குமே உகந்ததல்ல.

அண்மைக்கலங்களில் சீன அரசு தமிழக எல்லையில் இருந்து முப்பதே கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலங்கைத் தீவில் பெரிய அளவில் முக்கியமான உள்கட்டமைப்பு வசதிகள் அமைத்திட முதலீடு செய்து வருகிறது. இது இலங்கையின் இறையாண்மைக்கு பேராபத்து விளைவிக்கும் வகையில் உள்ளது என்பதை இந்திய அரசு உணர வேண்டும்.

கடந்த 2010-ம் ஆண்டு முதல் இலங்கையில் அதிமுக்கியத்துவம் கொண்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகளை உருவாக்க சீன நாடு நம்மையெல்லாம் திகைக்க வைக்கும் அளவுக்கு 7,048 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ள விவரங்கள் அனைத்தும் தங்கள் பார்வைக்கு கொண்டு வரப்பட்டிருக்கும் என நம்புகிறோம்.

கொழும்பு துறைமுக நகரத் திட்டம், நார்ச்சோலை அனல்மின் நிலையம், விரைவு சாலைகள், பெருந்துறைமுகங்கள், ரியல் எஸ்டேட் என பல்வேறு திட்டங்கள் இதில் அடங்கும். இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் தொகுதியில் உள்ள ஹம்பன்தோட்டாவில் 2010 ஆம் ஆண்டில் புதிய துறைமுகம் ஒன்றை அமைக்க 1.1 பில்லியன் அமெரிக்க டாலர்களை கடனாக வழங்கியதுடன் நிர்மாணித்து கொடுத்தது.

இலங்கை அரசு கடன் தொகையை திரும்பத் தர இயலாமல் போனதால் இந்த ஹம்பன்தோட்டா துறைமுகத்தை 2017-ல் சீனா தனக்கு சொந்தமாக்கிக் கொண்டு விட்டது. இந்த துறைமுகம், ஆயிரக்கணக்கான சரக்கு பெட்டகங்களை கையாளும் துறைமுகம், கப்பல் பாதைக்கு மிக அருகில் உள்ளது.

இந்த முதலீடுகள் மூலம் இன்று இலங்கையில் பல்லாயிரக்கணக்கான சீனர் குடியேறி உள்ளனர். சீன முதலீடுகள உருவாகியுள்ள திட்டங்கள் இலங்கை மக்களிடம் ஒருவித பெருமித உணர்வை உருவாக்கி இருப்பதுடன் இந்தியாவை விட சீனா தான் நட்புறவு மிக்க நாடு என்கிற எண்ணத்தையும் ஏற்படுத்தி உள்ளதும் இத்தகைய சூழ்நிலையில் இந்தியாவுக்கு எதிராகவும் சீனாவுக்கு ஆதரவுமான நிலையை நேபாளம் எடுத்துள்ளதைப் போல் இலங்கையும் எடுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

பிரதமர் மோடி: கோப்புப்படம்

மேலும், தென் சீனக் கடல் பகுதியுல் ராணுவ வலிமையை மேம்படுத்தும் சீனாவின் ஆதிக்க முயற்சிகளுக்கு எதிராக ஆசியான் அமைப்பு உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து குரலெழுப்பி உள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு இந்தியாவும் தனது தேசப்பாதுகாப்புக் கொள்கையில் சூயஸ் பகுதி தொடங்கி தெற்கு சீனக் கடல் வரை நீண்டுள்ள கடல் பரப்பையும் உள்ளடக்கிய தென் தமிழகக் கடல் பகுதிதான் தெற்கு சீனக் கடலுக்கும் சூயஸுக்கும் இடையே நடுநாயகமாக இருக்கும் கடல் பரப்பாகும்.

மத்திய அரசு ஏற்கெனவே அந்தமான் தீவில் உள்ள நமது முப்படைகளை வலிமைப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னுரிமை முனைப்புடன் மேற்கொண்டுள்ளது வரவேற்கத்தக்கது. அதைப்போலவே, தென் தமிழகக் கடல் பகுதி, குறிப்பாக சேது சமுத்திர கடல் பகுதி, புவியியல் ரீதியாகவும், சர்வதேச கப்பல் போக்குவரத்து முக்கியத்துவம் காரணமாகவும் நமது முழுக்கட்டுப்பாட்டில் இருப்பது இன்றியமையாதது.

இந்தக் கோணத்தில் இருந்து பார்க்கும் போது தடைபட்டு முடங்கிக் கிடக்கும் சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது தெளிவாகும். இன்னும் சொல்லப் போனால் தேசப் பாதுகாப்பு அச்சத்தின் அடிப்படையில் தான் சேது சமுத்திர திட்டத்துக்கான ஒப்புதலை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஏற்கெனவே வழங்கியது.

தமிழக மக்களின் 150 ஆண்டுகள் கனவான சேதுசமுத்திர திட்டம் நனவாகும் என்ற நம்பிக்கை 15 ஆண்டுகளுக்கு முன்னால் 2.07.2005 அன்று 2,400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டப் பணிகளின் தொடக்க விழா மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முன்னிலையில், சோனியா காந்தி பங்கேற்ற நிகழ்ச்சியில், இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மதுரையில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் அடிக்கல் நாட்டியபோது தமிழக மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.

பணிகள் சிறப்பாக முன்னேறிக் கொண்டிருந்த நிலையில் தேச நலனுக்கும் செழிப்புக்கும் எதிரான சில சக்திகள் திட்டமிட்டு சதி செய்து மதரீதியான யதார்த்தத்துக்கு ஒவ்வாத வாதங்களை முன்வைத்து நீதி பரிபாலனத்தை திசைதிருப்பி, 12 ஆண்டுகளாக இந்த திட்டம் முடங்கிப் போகச் செய்துவிட்டனர்.

சேது சமுத்திர கப்பல் கால்வாய் திட்டம் இந்த நாடு ஈன்றெடுத்த மாபெரும் அரசியல் தலைவர்களான அண்ணா, காமராஜர், கருணாநிதி, வாஜ்பாய் ஆகியோரின் கனவு திட்டமாகும். இன்னும் சொல்லப் போனால் கருணாநிதி மற்றும் அண்ணாவுடன் தான் கொண்டிருந்த பரஸ்பர அன்பும் பெருமதிப்பும் காரணமாகத்தான் அன்று பிரதமராக இருந்த வாஜ்பாய் சேது சமுத்திர திட்டத்திற்கான சாத்திய அறிக்கையினை தயாரிக்க அனுமதி அளித்து உயிரூட்டினார்.

2005 ஆம் ஆண்டு ஜூலை இரண்டாம் தேதி மதுரையில் நடைபெற்ற சேது சமுத்திர திட்ட விழாவுக்கு அரசு அழைப்பு விடுத்த நேரத்தில் பெருமகிழ்ச்சியுடன் 'இது எனது திட்டம், விரைந்து நிறைவேற எனது வாழ்த்துகள்' என்று வாஜ்பாய் கூறியதையும் அதனை மகிழ்வு பொங்க நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.

எனவே, இந்தியாவின் சர்வதேச கப்பல் போக்குவரத்து மட்டுமல்லாமல் தேசப்பாதுகாப்பையும் கருத்தில்கொண்டு, சேது கால்வாய் பாதை மத்திய அரசின் திறம்வாய்ந்த தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் தனது முழுமையான ஆய்வின் அடிப்படையில் ராமர் பாலம் எனப்படும் ஆதாம் பாலத்திற்கு சேதம் ஏதுமின்றி ஏற்கெனவே தேர்வு செய்த வழித்தடத்தில் சேது சமுத்திர திட்டப் பணிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன்.

ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள திட்ட வடிவமைப்பின் படி இந்திய துறைமுகங்களுக்கு வரும் கப்பல்களில் 65 சதவீதம் கப்பல்கள் திட்ட வசதிகளைப் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை இந்திய பிரதமராக இருந்த ஒவ்வொருவரும் தமிழனத்துக்கு என பெரிய திட்டங்களை வழங்கி மகிழ்ந்துள்ளனர். திருச்சி பி.ஹெச்.இ.எல், நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்க திட்டம், சென்னையில் உள்ள ரயில் இணைப்பு பெட்டி தொழிற்சாலை, ஆவடியில் ராணுவத்திற்கான டாங்கிகளை தயாரிக்கும் தொழிற்சாலை, சேலம் இரும்பாலை, சென்னை மெட்ரோ ரயில் மற்றும் மண்டல் கமிஷன் அறிக்கை அடிப்படையில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு போன்றவை இந்த வரிசையில் அடங்கும்.

நீண்ட காலம் பிரதமராக இருந்தவர்களில் ஒருவரான நீங்கள் தமிழகத்துக்கு வழங்கிய ஈடு இணையற்ற கொடையாக சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றிக் கொடுத்து அதன் விளைவாக 2024 ஆம் ஆண்டு பொங்கல் திருநாளில் முதல் கப்பல் பயணிக்க வழிவகுக்க வேண்டும்.

தாங்கள் இந்து மதக் கொள்கைகளை பெருமிதத்துடன் பின்பற்றி வருபவர் என்பது நாடறிந்த ஒன்றாகும். எனவே, மகான் ராமகிருஷ்ண பரமஹம்சர் மக்கள் குழப்பம் தீர்ந்து செயல்பட எடுத்துக்கூறிய அறிவுரையை இந்த நேரத்தில் மேற்கோள் காட்ட விரும்புகிறேன். 'இறைவனே ஆத்திகர். அவரே நாத்திகர். அவரே நல்லவர், அவரே தீயவர். அவரே உண்மை, அவரே உண்மையற்றவர். உறக்கம் விழிப்பு ஆகிய நிலைகளும் அவருடையதே. மேலும், அவர் எல்லா நிலையையும் கடந்தவர். இந்த உண்மையை அறிந்து கொண்டால் எல்லாக் குழப்பங்களும் தீர்ந்துவிடும்'.

ராமகிருஷ்ண பரமஹம்சரின் அறிவுரைக்கேற்ப, தமிழக மக்களின் சார்பில் விடுக்கப்பட்டுள்ள இந்த வேண்டுகோள் மீது சேது சமுத்திர திட்டம் தொடர்பான குழப்பங்களை தீர்த்து, திட்டம் விரைந்து நிறைவேற்றிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

இந்தியாவின் பாதுகாப்புக் கருதி, தமிழர்களின் 150 ஆண்டு கால சேது சமுத்திர கனவுத் திட்டத்தினை 2024 ஆம் ஆண்டு தமிழர் திருநாளுக்கு முன்னதாகவே நிறைவேற்றி, தமிழக மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிரதமர் நரேந்திர மோடி பெற வேண்டுமென திமுகவின் சார்பின் வேண்டுகோள் விடுக்கப்பட்டது"

இவ்வாறு அக்கடிதத்தில் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x