

தமிழகத்தில் கடந்த ஜூலை 31-ம் தேதி வரை 5 கோடியே 26 லட்சத்து 47 ஆயிரத்து 75 பேருக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று வருவாய்த் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அவர் பேசியதாவது:
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை 7.21 கோடியாகும். அதில் 5 வயதுக்கு மேற்பட்ட 6 கோடியே 74 லட்சத்து 18 ஆயிரத்து 169 பேர்களில் 5 கோடியே 62 லட்சத்து 83 ஆயிரத்து 959 பேருக்கு புகைப்படம், கைரேகை மற்றும் விழித்திரை படல அமைப்பு ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 31-ம் தேதி வரை 5 கோடியே 26 லட்சத்து 47 ஆயிரத்து 75 பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இலக்கு நிர்ணயிக்கப்பட்ட மக்கள் தொகையில் 83.48 சதவீதம் பேருக்கு தேசிய மக்கள் தொகை, பயோமெட்ரிக் பதிவுப் பணி முடிக்கப்பட்டுள்ளது.
ஆதார் அட்டை வழங்குவதில் தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக உள்ளது என்று அமைச்சர் உதயகுமார் கூறினார்.