Published : 10 Jul 2020 07:36 AM
Last Updated : 10 Jul 2020 07:36 AM

கே.பி.ஆர். பொறியியல் கல்லூரி மாணவர்கள் கரோனா பரவலை தடுக்கும் நவீன கருவி கண்டுபிடிப்பு

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நவீனக் கருவியும், அதைக் கண்டறிந்த கேபிஆர் கல்லூரி மாணவர்களும்.

கோவை

கோவை அருகே உள்ள கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள், கரோனா பரவலைத் தடுக்கும் நவீன கருவியைக் கண்டறிந்துள்ளனர்.

‘ஃபேரன்டைசர்’ என்ற இக்கருவியை இயந்திரவியல் துறை 4-ம் ஆண்டு மாணவர்கள் ரா.கார்த்திக்விஷால், ரா.த.கிஷோர் குமார், ரா.கவினேஷ் ஆகியோர், உதவிப் பேராசிரியர் பா.க.சரவணன் வழிகாட்டுதலின்கீழ் வடிவமைத்துள்ளனர்.

இந்தக் கருவியில் அடையாள அட்டையை காண்பிக்கும்போது, அதில் உள்ள தகவல்களை ஸ்கேன் செய்து, வருகை நேரத்துடன் ‘க்ளொடு ஸ்டோரேஜ்’-ல் சேமித்துக் கொள்ளும். கைமணிக்கட்டை காண்பிப்பதன் மூலம் உடல் வெப்பநிலையை துல்லியமாக கண்டறியலாம். கூடுதல் வெப்பநிலை இருந்தால், உடனடியாக ஒலி எழுப்பும். உடல் வெப்பநிலை விவரமும் சேமித்துவைக்கப்படுவதுடன், தானியங்கியாக ‘ஹேன்ட் சானிடைசர்’ அளிக்கும்.

இதன் மூலம், சராசரியைக் காட்டிலும் அதிக வெப்பநிலை உள்ளவரை உடனடியாக கண்டறிந்து, தனிமைப்படுத்தலாம். ஒரு மணி நேரத்தில் 300 பேர் வரை இக்கருவியை உபயோகிக்கலாம்.

இதைக் கண்டறிந்த மாணவர்கள் மற்றும் இயந்திரவியல் துறைத் தலைவர் நா.குணசேகரனுக்கு, கே.பி.ஆர். குழுமத் தலைவர் கே.பி.ராமசாமி, கல்லூரி முதல்வர் மு.அகிலா, முதன்மைச் செயலர் ஏ.எம்.நடராஜன் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x