

உலகில் துயரங்கள் நீங்கி நன்மை பெறவும், தற்போது நிலவும் கரோனா போன்ற சூழ்நிலைகள் மாறவும் காஞ்சிபுரம் காமாட்சிஅம்மன் கோயிலில் மகா யாகம்நடத்தும்படி காஞ்சி சங்கர மடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அறிவுறுத்தி இருந்தார்.
இதைத் தொடர்ந்து இந்த மகாயாகம் கடந்த ஜூலை 2-ம் தேதி தொடங்கியது. சாஸ்திரங்களில் பரிந்துரைத்துள்ள புரச்சரணம், தசாம்ச விதியில் உள்ளபடி மகா யாகம் நடைபெற உள்ளது.
கடந்த 2-ம் தேதி தொடங்கிய இந்த யாகம் தினமும் காலை 7.30 மணிமுதல் காலை 11 மணிவரை நடைபெறுகிறது. இந்த யாகத்தின்போதுதினமும் லலிதா சகஸ்ர பாராயணம் செய்யப்படுகிறது.
இந்தச் சிறப்பு யாகம் தொடர்ந்து 216 நாட்கள் நடைபெறும். தினந்தோறும் இந்தயாகத்தை தொடர்ந்து காமாட்சிஅம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெறுகின்றன. சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் இந்த யாகத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் ஸ்ரீகார்யம் சல்லா விஸ்வநாத சாஸ்திரிகள், செயல் அலுவலர் தியாகராஜன், யாகம் நடத்தும் சாஸ்திரிகள் மட்டும் யாகத்தில் பங்கேற்றனர்.
தற்போது நிலவும் சூழ்நிலை மாறி பொதுமக்களுக்காக கோயில் திறக்கப்படும்போது பக்தர்கள் இந்த மகா யாகத்தில் பங்கேற்கலாம் என்றும், இந்த யாகத்துக்கு மொத்தம் ரூ.16 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் இந்த யாகத்தை நடத்தும் குழுவினர் தெரிவித்தனர். இந்த யாகத்துக்காக நன்கொடை அளிக்க விரும்புபவர்கள் காஞ்சிபுரம் சங்கர மடத்தை அணுகி கூடுதல் விவரங்களை பெறலாம்.