

ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட பின்னரும் கடைகளை மூடுவது போன்ற போலீஸாரின் அத்துமீறல் தொடர்வதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகம் முழுவதும் கடை திறந்து இருக்கும் காலத்தை ஒரே சீராக கடைபிடிக்குமாறு அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கடையைத் திறந்து மூடும் நேரத்தில், அரசு அதிகாரிகளின் அதிகாரங்களும் தலையீடுகளும் இருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் கடை திறக்கும் நேரத்தை குறைப்பது, வணிகர்களுக்கு அபராதம் விதிப்பது, கடைகளை மூடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
குறிப்பாக, சென்னையில் கடையைப் பூட்டி சாவியை காவல் அதிகாரி எடுத்துச் சென்றது மிகவும் வேதனைக்குரியது. இவை தடுக்கப்பட வேண்டும்.