

நாட்டிலேயே முதல்முறையாக சென்னை மருத்துவக் கல்லூரியில் 1978-ல் முதியோர் சிகிச்சைத் துறையை தொடங்கியவர் டாக்டர் வி.எஸ்.நடராஜன். அத்துறைத் தலைவராகவும் பணியாற்றியவர். சென்னை அரசு பொது மருத்துவமனையில் முதியோர் சிகிச்சைப் பிரிவு மருத்துவராகவும் பணியாற்றினார். தனது பெயரில் முதியோர் நல அறக்கட்டளை நடத்தி வருகிறார்.
சென்னை கிண்டியில் கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் அமைக்கப்பட்ட தேசிய முதியோர் நல மருத்துவ மையம், தற்போது கரோனா மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. இந்த மருத்துவ மையம் அமைவதற்கு பெரு முயற்சி மேற்கொண்டவர் டாக்டர் வி.எஸ்.நடராஜன்.
இந்நிலையில், அவர் நேற்றுவெளியிட்ட செய்தியில் கூறி யிருப்பதாவது:
சென்னையில் தேசிய முதியோர் நல மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய அரசுக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு திட்டத்தை அனுப்பினேன். நான் ஓய்வுபெற்ற பிறகு, டாக்டர் பா.கிருஷ்ணசாமி டெல்லி வரை சென்று அத்திட்டத்தை தீவிரப்படுத்த உதவினார். மத்திய அரசு அனுமதி அளித்த பிறகு, அதை நிறைவேற்ற தீவிரமாக செயல்பட்டார்.
தற்போது அத்துறை தலைவரான டாக்டர் ஜி.எஸ்.சாந்தி, அத்துறையை ஆரம்பிக்க உள்ள நிலையில், தற்போதைய அவசர தேவை கருதி, இம் மையம், கரோனா மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. இதை முதல்வர் பழனிசாமி கடந்த 7-ம் தேதி திறந்து வைத்தார்.
கரோனா பாதிக்கப்பட்டவர்கள் குணம் அடைந்த பிறகு ‘தேசிய முதியோர் நல மருத்துவ மையம்’ அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டு, மூத்த குடிமக்களுக்கு தன் பணியை செய்யும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளோம்.
இவ்வாறு டாக்டர் நடராஜன் தெரிவித்துள்ளார்.