

தமிழகத்தில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து திமுகவினர் அறையில் இருந்துகொண்டு அறிக்கைகள் மூலமாக மக்களைத் திசை திருப்புகின்றனர் என்று அமைச்சர் கே.சி.வீரமணி குற்றம் சாட்டினார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் ஆகியோர் இன்று (ஜூலை 9) ஆய்வு செய்தனர்.
இந்தக் கூட்டத்தில் ஆட்சியர்கள் சண்முகசுந்தரம் (வேலூர்), சிவன் அருள் (திருப்பத்தூர்), திவ்யதர்ஷினி (ராணிப்பேட்டை), காவல் கண்காணிப்பாளர்கள் பிரவேஷ்குமார் (வேலூர்), விஜயகுமார் (திருப்பத்தூர்), மயில்வாகனன் (ராணிப்பேட்டை) மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்திற்குப் பிறகு அமைச்சர் கே.சி.வீரமணி செய்தியாளர்களிடம் கூறும்போது, "ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 65 ஆயிரம் பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கரோனா தடுப்புப் பணியில் அரசு வேகமாகச் செயல்படுகிறது. இதனால் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கரோனாவால் ஏற்படும் இறப்பு ஒரு சதவீதமாக இருக்கிறது. அதிலும் வயதானவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள்தான் இறக்கின்றனர். காவல் துறையினர் சுமார் 60 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திமுக எம்.பி., எம்எல்ஏக்கள் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரிடமும் கரோனா தடுப்புப் பணிகள் குறித்த விவரங்களைப் பெறுகின்றனர். மாவட்ட ஆட்சியர்களின் செயல்பாடுகளைப் பாராட்டும் திமுகவினர் வெளியில் வந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறுகின்றனர். இந்த அரசின் மீது குற்றம் சொல்ல வேண்டும் என்று நோக்கோடு திட்டமிட்டுச் செயல்படுகின்றனர்.
தமிழக முதல்வர் கூறுவதுபோல் ஒரு உயிரைக்கூட இழக்கக்கூடாது என்று ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் செயல்பட்டு வருகின்றனர். திமுகவினர் அறையில் இருந்துகொண்டு அறிக்கைகள் மூலமாக மக்களைத் திசை திருப்புகிறார்கள். அமைச்சர்கள் இரண்டு, மூன்று பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கரோனா விஷயத்தில் வரலாற்றுப் பிழை ஏற்படக்கூடாது என்பதற்காக தார்மீகப் பொறுப்பேற்று தங்கள் உயிரையும் துச்சமென மதித்துச் செயல்படுகின்றனர்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கரோனா பரிசோதனை செய்தவர்களுக்கான முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் இறுதிச்சடங்கு, திருமண நிகழ்ச்சிகளில் விதிகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா? என்பது கண்காணிக்கப்படும்" என்று தெரிவித்தார்.