Last Updated : 09 Jul, 2020 09:59 PM

 

Published : 09 Jul 2020 09:59 PM
Last Updated : 09 Jul 2020 09:59 PM

கரோனா பரவல்: பொழுதுபோக்குக்காகத் தெரிந்த வெளிநபர்களை வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டாம்; கிரண்பேடி அறிவுறுத்தல்

பொழுதுபோக்குக்காகத் தெரிந்த வெளிநபர்களை வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டாம் என, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வலியுறுத்தியுள்ளார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இன்று (ஜூலை 9) வாட்ஸ் அப்பில் வெளியிட்ட தகவல்:

"காரைக்காலில் ஒரு கைரேகை ஜோதிடம் பார்ப்பவரின் வழியாக 13 நபர்களுக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவருடைய அறியாமையால் மற்றவர்களுக்கும் கரோனா தொற்றைப் பரவச் செய்துள்ளார். அவருக்கான சிகிச்சையை அவரே வீட்டில் எடுத்துக் கொண்டிருந்தார்.

புதுச்சேரியில் மற்றொருவர் வீடு வீடாகச் சென்று பிரசாதம் வழங்கியுள்ளார். இறுதியாக அவர் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அவரைச் சார்ந்தோருக்கு தொற்று பரவ இவர் காரணமாகி விட்டார்.

மருத்துவர்களிடம் வரும் நோயாளிகளின் வழியாக தொடர்புத் தடம் அறிந்ததில் பலரும் சிறிய மதுபான விருந்துகள், ஒரு சிலருடைய வீட்டில் நடைபெற்ற சிறிய பொதுவான விருந்துகளில் பங்கேற்று இருந்தது தெரியவந்துள்ளது.

ஒவ்வொரு தொழிற்சாலையினுடைய மேலாளர்களும் அவர்களுடைய நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் கரோனா தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு வழிமுறையைப் பின்பற்றுவதில் குறைபாடு ஏற்பட்டால் அந்தத் தொழிற்சாலையின் மேலாளர்களே பொறுப்பேற்க வேண்டும். இதைப் பின்பற்றவில்லை எனில் வழக்குப் பதியப்படும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு முகக்கவசத் தொழிற்சாலையில் மிக அதிகமான கரோனா தொற்றுப் பரவலை ஏற்படுத்தியதைப் போல மீண்டும் நடக்கக்கூடாது.

கரோனா தொற்று பரவுவதைத் தடுப்பதற்கான செய்தி நம் கையிலேதான் இருக்கிறது. நம்மைப் பாதுகாத்துக் கொள்வதால் மற்றவர்களையும் பாதுகாக்க முடியும். இது அப்படியே நேர்மாறாகவும் பொருந்தும்.

அனைத்துப் பொதுத் தொடர்புகளிலும் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.

மேலும், பொழுதுபோக்குக்காகத் தெரிந்த வெளிநபர்களை வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டாம். வெளியிலிருந்து வருபவர்களுக்குக் காய்ச்சல் அறிகுறி உள்ளதா என்பதை நீங்கள் அறிய முடியாது. ஒரு வேளை அவர்கள் காய்ச்சலைக் குறைப்பதற்கு வீட்டிலேயே மருந்து எடுத்துக் கொண்டிருக்கலாம். எனவே கவனமாக இருங்கள்".

இவ்வாறு கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x