

திருச்சி மாவட்டம் தொட்டியம் ஒன்றியத்துக்குட்பட்ட காடுவெட்டியில் லேசாக சேதமடைந்திருந்த வாய்க்கால் பாலத்தின் ஒரு தூண் ஆற்றுக்குள் இறங்கிவிட்டது. இதனால், பாலம் பயன்படுத்த முடியாத அளவுக்குச் சென்றுவிட்டதால் கிராம மக்கள், விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக தொட்டியம் ஒன்றியக் குழு துணைத் தலைவர் மா.சத்தியமூர்த்தி தலைமையில் காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்த 9 பேர் இன்று (ஜூலை 9) மாவட்ட ஆட்சியர் சு.சிவராசுவை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில், "தொட்டியம் ஒன்றியத்துக்குட்பட்ட காடுவெட்டி ஊராட்சியில் உள்ள சேதமடைந்த புது வாய்க்கால் பாலம் மற்றும் குறுகலாக உள்ள முள்ளிப்பாடி பாலம் ஆகியவற்றை அகற்றிவிட்டு புதிய பாலங்கள் கட்ட வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
பின்னர், மா.சத்தியமூர்த்தி 'இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியதாவது:
"காடுவெட்டி மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களைச் சேர்ந்தவர்கள் புது வாய்க்கால் பாலம் வழியாக மாயனூர், கரூர் ஆகிய பகுதிகளுக்குச் சென்று வந்தனர். இதனிடையே, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் புது வாய்க்கால் பாலத்தில் லேசான சேதம் நேரிட்டது. இது தொடர்பாக தகவல் அளித்தும் தொடர்புடைய அலுவலர்கள் பாலத்தைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்தநிலையில், கடந்த வாரம் புது வாய்க்கால் பாலத்தில் ஒரு தூண் ஆற்றுக்குள் இறங்கிவிட்டதால், போக்குவரத்துக்குப் பயன்படுத்த முடியாத அளவுக்குப் பாலம் சேதமடைந்துவிட்டது. இதனால், மறுகரையில் உள்ள 100 ஏக்கர் தென்னந்தோப்புகள், 150 ஏக்கர் வாழைத் தோப்புகளுக்கு விவசாயிகளால் விவசாய இயந்திரங்களை, உழவுப் பொருட்களை எடுத்துச் செல்ல முடியவில்லை. இதனால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதேபோல், காடுவெட்டி ஊராட்சியில் உள்ள முள்ளிவாடி வாய்க்கால் குறுகலாக உள்ளதால் மறுகரையில் உள்ள சுடுகாட்டுக்குச் சடலத்தை சுமந்துசெல்ல வேண்டியுள்ளது. கிராமத்தில் 2 வாய்க்கால் பாலங்கள் இருந்தும் இல்லாத நிலைபோல் இருப்பதால் அனைத்துத் தரப்பு மக்களும் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே, இரு வாய்க்கால் பாலங்களையும் அகற்றிவிட்டு, தரமான, அகலமான புதிய பாலங்களைக் கட்டித் தர மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்".
இவ்வாறு சத்தியமூர்த்தி தெரிவித்தார்.