Published : 09 Jul 2020 09:39 PM
Last Updated : 09 Jul 2020 09:39 PM

நெய்வேலி பாய்லர் விபத்து; என்எல்சிக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ.5 கோடி அபராதம்: நிபுணர் குழு அமைத்து ஆய்வு நடத்த உத்தரவு 

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் கொதிகலன் வெடித்து விபத்து ஏற்படுத்திய விவகாரத்தில் என்எல்சி நிர்வாகத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ.5 கோடி அபராதம் விதித்துள்ளது. உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு தொகையாக ரூ.30 லட்சம் அளிப்பதை ஏற்க முடியாது. பின்னர் இழப்பீடு குறித்து அறிவிக்கிறோம் எனத் தெரிவித்துள்ளது.

என்எல்சியில் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 10 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக வெளிவந்த செய்தி அடிப்படையில் தாமாக முன்வந்து தேசிய பசுமை தீர்ப்பாயம் வழக்குப் பதிந்தது.

அந்த வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் நடுவர் ஏ.கே.கோயல் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, என்எல்சி தரப்பு வழக்கறிஞர், விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா 30 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.

நடுவர் ஏ.கே.கோயல், ''அந்தத் தொகை இடைக்கால நிவரணமாக இருக்கட்டும், ஆனால் முழு நிவாரணம் எவ்வளவு வழங்க வேண்டும் என்பது பின்னர் முடிவு செய்யலாம்'' எனத் தெரிவித்தார்.

மேலும், இந்த விபத்து தொடர்பாக சுதந்திரமாக ஒரு குழு ஆய்வு செய்ய வேண்டும். உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும். அதேபோல காயமடைந்து தற்போது வரை சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 5 லட்ச ரூபாயும், சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களுக்கு இடைக்கால நிவாரணமாக 1 லட்ச ரூபாய் இழப்பீடும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும் அபராதத் தொகையான ரூ.5 கோடி ரூபாயை இழப்பீடு வழங்குவதற்கு ஏதுவாக என்எல்சி நிர்வாகம் 2 வார காலத்துக்குள் கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

பாய்லர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், கடலூர் மாவட்ட ஆட்சியர், தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை ஐஐடி நிறுவனம் ஆகியவை அடங்கிய நிபுணர் குழுவை அமைத்து உத்தரவிட்டனர்.

இந்தக் குழு சம்பவம் நடைபெற்ற இடத்துக்குச் சென்று

*விபத்து எப்படி ஏற்பட்டது?

*விபத்து நடக்க யார் காரணம்? குறிப்பாக நிர்வாகமா, அல்லது அங்குள்ள ஊழியர்களா?

*அங்கு உரிய பாதுகாப்பு அம்சங்கள் உள்ளனவா? பாதுகாப்பு நடைமுறை முறையாக கடைப் பிடிக்கப்படுகிறதா ?

*பாய்லர் வெடித்ததால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா (நீர், காற்று , மண்)? அருகில் வசிப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா?

*பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கும், மறுசீரமைப்பதற்கும் எடுக்கப்பட்ட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் சேதமடைந்த சொத்துகள், சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றின் மதிப்பு என்ன ?

*மேலும் வேறு ஏதேனும் இது தொடர்பான பிரச்சினைகள் உள்ளனவா? என்பதை இந்த குழு ஆய்வு செய்து அறிக்கையை 3 மாத காலத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x