சென்னையில் ஐடி நிறுவனங்கள் 10% ஊழியர்களுடன் செயல்பட அனுமதி: தமிழக அரசு அறிவிப்பு

சென்னையில் ஐடி நிறுவனங்கள் 10% ஊழியர்களுடன் செயல்பட அனுமதி: தமிழக அரசு அறிவிப்பு
Updated on
1 min read

ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், தளர்வுகளையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஐடி நிறுவனங்கள் 10 சதவீத ஊழியர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிவிப்பு:

“இந்தியா முழுவதும் கரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு, ஊரடங்கு உத்தரவை மார்ச் 25-ம் தேதி முதல் அமல்படுத்தியதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியது. இதைத் தொடர்ந்து, கரோனா தொற்றின் நிலைமையைக் கருத்தில் கொண்டும், மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டும், சில தளர்வுகளுடன் ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஏற்கெனவே பல பணிகளுக்கு அனுமதி அளித்து பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் இந்த ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.

தற்போது பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளைத் தவிர (Containment Zones), மற்ற பகுதிகளில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்களில், அந்நிர்வாகமே ஏற்பாடு செய்யும் வாகனங்களில் சென்று, அதிகபட்சம் 10 சதவீதப் பணியாளர்களுடன் இயங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறது.

பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பைப் பயன்படுத்தி, கை கழுவுவதையும், வெளியிடங்களில் முகக்கவசத்தை அணிந்து செல்வதையும், சமூக இடைவெளியைத் தவறாமல் கடைப்பிடித்து அவசியத் தேவையில்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்து, அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்க கேட்டுக்கொள்ளப்படுகிறது”.

இவ்வாறு தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in