

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மூலம் மட்டுமே உர விற்பனை செய்ய வேண்டுமென விற்பனையாளர்களையும், விவசாயிகளையும் அச்சுறுத்துவதா? என்று மத்திய, மாநில அரசுகளுக்கு பி.ஆர்.பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் உர விற்பனை நிறுவனங்கள், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் மூலம் மட்டுமே விவசாயிகளிடம் உரம் விற்பனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் அண்மையில் அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதற்காக ஜூலை 15-ம் தேதிக்குள் உர விற்பனை செய்யும் நிறுவனங்கள் அனைத்தும் பணப் பரிவர்த்தனைக்கான ரகசியக் குறியீட்டு எண் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு விவசாயிகள் தரப்பில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
இதுகுறித்து தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் இன்று வெளியிட்ட அறிக்கை:
''உர விற்பனை நிறுவனங்கள் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் மூலம் மட்டுமே விவசாயிகளிடம் உரம் விற்பனை செய்ய வேண்டும் என மத்திய அரசு வெளிட்டுள்ள அரசாணைக்குக் கடும் கண்டனத்தையும், ஒட்டுமொத்தமான எதிர்ப்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மத்திய அரசின் இந்த உத்தரவை உர விற்பனை நிறுவனங்கள் உடனே செயல்படுத்த முன்வர வேண்டும் இல்லையேல் சட்ட நடவடிக்கை மேற்கொள்வோம் என மாவட்ட வேளாண் துறை அதிகாரிகள், விற்பனை நிறுவனங்களை மிரட்டி வருவதோடு இதுகுறித்து அறிக்கைகளும் வெளியிட்டு வருகின்றனர்.
மேலும், ஒவ்வொரு விவசாயியும் இதற்காகக் கைபேசியை அவசியம் கையில் வைத்துக் கொள்வதோடு, வங்கிகளில் இணையதள வங்கிப் பணப் பரிவர்த்தனைக்கான வசதியைப் பெற வேண்டும் என நிர்பந்திக்கப்படுகிறார்கள்.
கரோனா பாதிப்பால் விவசாயிகள் பல்வேறு இழப்புகளைச் சந்தித்து வருகின்றனர். பெரும்பாலான விவசாயிகள் வறுமையிலும், படிப்பறிவு குறைவான நிலையிலும் உள்ள நிலையில அவர்கள் ரூ.15,000க்கு மேல் விலை கொடுத்து ஆண்ட்ராய்டு கைப்பேசி எப்படி வாங்க முடியும்? அப்படியே வாங்கினாலும் அதனைப் பயன்படுத்தி உரம் வாங்கத் தேவையான பயிற்சியும் அவர்களுக்கு இருக்குமா? இதையெல்லாம் நன்கு தெரிந்து கொண்டே மத்திய - மாநில அரசுகள் விவசாயிகளை வஞ்சிக்கின்றன. விவசாயிகளின் எதார்த்த நிலையை உணர்ந்து அரசு இந்தத் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும்.
இந்தியா முழுவதும் ரூ.1 லட்சம் கோடியில் விவசாய உற்பத்தி மேம்படுத்தப்படும் என அறிவித்துள்ள மத்திய அரசு, இதற்குத் தேவையான நிதி தனியாரிடம் பெறப்படும் என அறிவித்துள்ளதன் மூலம் விவசாயத்தை அந்நியப் பெருமுதலாளிகளிடம் அடகு வைக்கும் முயற்சியைத் தொடங்கி உள்ளதாகவே தெரிகிறது. இதையும் உடனடியாகக் கைவிட வேண்டும்.
தமிழகக் கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்குக் கடன் வழங்க கரோனா சிறப்பு கூடுதல் நிதியாக ரூ. 1,000 கோடி தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக நபார்டு வங்கி அறிவித்துள்ளது. இதனைப் பயன்படுத்தி விவவசாயிகளின் நிலுவைக் கடன்களைத் தள்ளுபடி செய்யவேண்டும் இல்லையெனில் பழைய கடன்களை ஒத்தி வைத்துவிட்டு புதிய கடன்களை நிபந்தனையின்றி வழங்க உடன் முன்வர வேண்டும்.
மேலும், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்குவதில் பழைய நடைமுறையையே பின்பற்ற வேண்டும். அத்துடன் கர்நாடகாவிடமிருந்து ஜனவரி முதல் நமக்குத் தர வேண்டிய சுமார் 50 டிஎம்சி தண்ணீரை பெறக் காவிரி ஆணையம் மூலம் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வலியுறுத்துகிறேன்''.
இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.