Published : 09 Jul 2020 06:37 PM
Last Updated : 09 Jul 2020 06:37 PM

உணவகங்கள், ஆன்லைன் உணவு வழங்கும் நிறுவனங்கள், அழகு நிலையங்கள்: வழிகாட்டுதல்கள் குறித்து மாநகராட்சி அறிவிப்பு

ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் அரசின் வழிகாட்டுதல்களை முழுமையாகக் கடைப்பிடிப்பது தொடர்பான உணவகங்கள், ஆன்லைன் உணவு வழங்கும் நிறுவனங்கள், அழகு நிலையங்கள் ஆகியவற்றின் உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி வழிகாட்டுதல்களை அளித்துள்ளது..

இதுகுறித்த சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

''சென்னை மாநகராட்சி சார்பில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்கள், பரிசோதனை மையங்கள், கோவிட்-19 பாதுகாப்பு மையங்கள், வீடுகளில் தனிமைப்படுத்தும் மேலாண்மை திட்டம், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், முகமூடி அணிதல் குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கோவிட்-19 கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுக்க சென்னை மாநகரப் பொதுமக்களைப் பாதுகாக்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முனைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பொதுமக்களின் அன்றாட அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும், பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குள் உணவகங்கள், ஆன்லைன் உணவு வழங்கும் நிறுவனங்கள் மற்றும் அழகு நிலையங்கள் நடத்துபவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையிலும், அரசால் 31.07.2020 வரை சில தளர்வுகளுடன் பொது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரசு வழிகாட்டுதல்களை முழுமையாகக் கடைப்பிடிப்பது தொடர்பாக உணவகங்கள், ஆன்லைன் உணவு வழங்கும் நிறுவனங்கள், அழகு நிலையங்கள் ஆகியவற்றின் உரிமையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆணையர் பிரகாஷ், தலைமையில் இன்று (09.07.2020) ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.

மேலும், கோவிட்-19 தொடர்பாக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005-ன் கீழ் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மையின் வழிகாட்டுதல்கள்/அறிவுரைகளை அனைத்து உணவகங்கள், ஆன்லைன் உணவு வழங்கும் நிறுவனங்கள், அழகு நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்து கூட்டத்தில் விளக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் ஆணையர் பிரகாஷ் கூறுகையில், 'அனைத்து உணவகங்கள், ஆன்லைன் உணவு வழங்கும் நிறுவனங்கள், அழகு நிலையங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் அனைத்து வாடிக்கையாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் உட்பட அனைவரும் ஆறு அடி இடைவெளியுடன் கூடிய சமூக இடைவெளியினைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.

உணவகங்கள்/ அழகு நிலையங்கள் முகப்பு வாயிலில் கண்டிப்பாக கைகளைக் கழுவுவதற்கு ஏதுவாக கிருமிநாசினி (Sanitizer) வைக்கப்பட்டிருக்க வேண்டும். வணிக வளாகங்கள் தவிர்த்து, அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகளில் ஒரே நேரத்தில் அதிகபட்சம் 5 வாடிக்கையாளர்கள் மட்டும் கடைக்குள் வருவதை உறுதி செய்து, தகுந்த சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் அனுமதிக்கப்பட வேண்டும்.

கடைகளில் குளிர்சாதன வசதி இருப்பினும் அவை இயக்கப்படக்கூடாது. மேற்கண்ட நிபந்தனைகளை மீறும்பட்சத்தில் உணவங்கள்/ அழகு நிலையங்களிடம் அதற்கான அபாரதத் தொகை வசூலிக்கப்படும்.

எனவே, கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும், அனைத்து வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்' என்று ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.

உணவகங்கள், ஸ்விக்கி, ஜொமேட்டோ, டேன்சோ ஆகிய ஆன்லைன் உணவு வழங்கும் நிறுவனங்கள், நேச்சுரல்ஸ், கிரீன் டிரண்ட்ஸ், டோனி அன்ட் கய் ஆகிய அழகு நிலையங்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்''.

இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x