Published : 09 Jul 2020 05:04 PM
Last Updated : 09 Jul 2020 05:04 PM

கிரீமிலேயர், நீட் போன்ற மாநில உரிமை காக்கும் போராட்டத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி ஒன்றிணைந்து போராட வேண்டும்: கி.வீரமணி வேண்டுகோள்

பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயர், இட ஒதுக்கீட்டின் அடிப்படைக்கே விரோதமானது. தமிழ்நாட்டில் ஆளும் அரசும், எதிர்க்கட்சியும் ஒன்றுபட்டு எதிர்த்துக் குரல் கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. தமிழ்நாட்டில் அனைவரும் ஒன்றுபட்டு எதிர்ப்போம் என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இன்று வெளியிட்ட அறிக்கை:

''இட ஒதுக்கீடு என்னும் சமூக நீதி, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டு, பாதுகாக்கப்படும் முக்கியக் கோட்பாடு - காலங்காலமாய் கல்வியிலும், உத்தியோகங்களிலும் வாய்ப்பு மறுக்கப்பட்ட கோடானுகோடி ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் புது வாய்ப்பு, புது வாழ்வு தருவதற்காக நமது தலைவர்கள் போராடி, பெற்ற உரிமைகளாகும்.

இவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்துப் போகச் செய்ய, உயர் சாதி ஆதிக்கம் கொண்ட அதிகாரவர்க்கமும், நீதிமன்றங்களும் நாளும் முயற்சித்த வண்ணம் உள்ளன. மக்கள் மன்றத்தின் திரண்ட முயற்சியும், தொடர்ந்த விழிப்புணர்வும்தான் இதைக் காப்பாற்றும் வகையில் போராடி வெற்றி கண்டு வருகிறது.

தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்டோர் ஆகியவர்களுக்கு சட்டப்படி கிடைக்கும் இட ஒதுக்கீட்டினைத் தட்டிப் பறிக்க பல ‘கண்ணிவெடிகள்’ அவ்வப்போது வைக்க அதிகார ஆதிக்க சக்திகளும், பொருளாதார அடிப்படை என்று கொண்டு வந்துவிட்டால், இட ஒதுக்கீட்டின் மூலக்கூறுபாட்டினையே அழித்துவிட முடியும் என்றே திட்டமிட்டு, புதிய முயற்சிகளை ஆளும் கட்சியான ஆர்.எஸ்.எஸ். கொள்கையை அமல்படுத்தும் பாஜக அரசு முனைப்புக் காட்டி வருகிறது.

எடுத்துக்காட்டாக, 27 சதவிகித இட ஒதுக்கீடு என்பதில் தேவையற்ற பொருளாதார அளவுகோலைப் புகுத்தி, கைக்கெட்டியதை வாய்க்கெட்டாமல் செய்து வரும் வகையில், இதனைப் பாதுகாக்கவேண்டிய தேசிய பிற்படுத்தப்பட்டோர் நலக் கமிஷன் கூட ‘வேலியே பயிரை மேய்வதற்குத்’ துணை நிற்பதுபோல், பொருளாதார அளவுகோல் - புதுப்புது உத்திகளாக - சம்பளம் - விவசாய வருமானம் உள்ளிட்ட 12 லட்சம் என்றெல்லாம் உயர்த்தி இட ஒதுக்கீட்டின் அடிப்படைத் தத்துவத்தையே அழிக்க முயலுகின்றனர்.

‘‘Reservation is not a poverty alleviation scheme’’ - ‘‘இட ஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டமல்ல’’ - என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளேகூட வசந்தகுமார் வழக்கில் தெளிவுபடுத்தியும்கூட, இத்தகைய கண்ணாமூச்சி விளையாட்டு தொடர்ந்த வண்ணம் உள்ளது.

சமூக நீதி பூமியாம் தமிழ்நாடுதான் இந்தியா முழுமைக்கும் வழிகாட்டும் கலங்கரை வெளிச்சமாகும். தமிழ்நாடுதான் சரியான வழிகாட்டும் மாநிலம்.

1. இப்போது மத்திய அரசின் முயற்சியான பிற்படுத்தப்பட்டோருக்குக் கிரீமிலேயரில் புதிய சேர்க்கைகள் - சம்பளத்தைச் சேர்ப்பது போன்றவை - முன் கூறப்பட்ட உறுதி மொழிகளுக்கு எதிரானது என்பதையும்,

2. மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டை ரத்து செய்தல்.

3. மருத்துவப் படிப்புகளில் இளநிலை, முதுநிலை மற்றும் பட்டயப் படிப்புகளுக்கான சேர்க்கைகளில் - ‘நீட்’ எனும் மத்திய அரசால் புகுத்தப்பட்ட நுழைவு (அது அரசமைப்புச் சட்ட விதிகளுக்கு முரணானது - தேர்வு நடத்தும் உரிமை பல்கலைக் கழகங்களுக்கு மட்டுமே உரியது) தேர்வு ரத்து செய்யப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி, திமுக தலைவர் ஸ்டாலின் பிரதமருக்கு நீண்ட விளக்கமாக கடிதம் எழுதியிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது.

மாத வருமானமும் - விவசாய வருமானமும் கிரீமிலேயர் கணக்கில் கொண்டு வரப்படுவதையும் எதிர்க்கட்சித் தலைவர் எதிர்த்துள்ளது சிறப்பானதாகும்.

அதுபோலவே, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தமிழக அரசின் சார்பில் பிரதமருக்கு, ஓபிசி - பிற்படுத்தப்பட்டவர்களுக்குக் கிரீமிலேயர் பிரிவை முடிவு செய்வதில், தற்போதுள்ள நிலையே தொடரவேண்டும் - இதில் சம்பளம், விவசாய வருமானத்தை இணைக்கக் கூடாது என்றும் பிரதமருக்குக் கடிதம் எழுதியிருப்பது வரவேற்கத்தக்கது.

கட்சி வேறுபாடுகளைத் தாண்டி, சமூக நீதியில் தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளது மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். தமிழ்நாடு - ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதை இப்போது மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்.

கொள்கை அளவில் தொடக்கத்திலிருந்தே அந்த நிலைப்பாடு உடையதாக இருந்தாலும், இடையில் அதில் காட்டப்பட்ட தொய்வு இப்போது தவிர்க்கப்படுதல் அவசர அவசியம்.

சமூக நீதி - இட ஒதுக்கீட்டினைப் பாதுகாக்க தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி - ஆளுங்கட்சி என்ற பேதம் துளியும் இன்றி அனைவரும் ஒரே குரலில், ஓரணியில் - மத்தியத் தொகுப்புக்கு அளித்த மருத்துவக் கல்லூரி இடங்களுக்கு இட ஒதுக்கீடு பெறுவதில் வழக்குகள் போடுவதற்கு ஒரே நிலைப்பாட்டுடன் இருப்பது பாராட்டத்தக்கது.

இந்த உறுதியை மேலும் வலுப்படுத்திட வேண்டும்; இதில் எந்தக் கட்சிக்கு வெற்றி என்ற பிரச்சினையே இல்லை; மாறாக, சமூக நீதிக்கு வெற்றி - தமிழ்நாட்டு மக்களுக்கு வெற்றி என்ற அளவில் ஒருங்கிணைந்து போராடவும் தயங்கக் கூடாது.

உரிமைகள் பறிபோகாமல் தடுப்பதற்கு இடையறாத விழிப்புணர்வும், தொடர் அறப்போராட்டங்களும் தேவை''.

இவ்வாறு வீரமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x