திருச்சி உட்பட 4 மாவட்டங்களில் கிராம சுகாதார செவிலியர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்; கரோனா தடுப்பு உள்ளிட்ட மருத்துவ சேவைகளில் தொய்வு
திருச்சி உட்பட 4 மாவட்டங்களில் கிராம சுகாதார செவிலியர்கள் 2-வது நாளாக இன்றும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், கரோனா தடுப்பு பணி, தடுப்பூசி இடுதல் உட்பட பல்வேறு சுகாதார சேவைகளில் தொய்வு ஏற்பட்டது.
திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் வைப்பூரைச் சேர்ந்தவர் சண்முகம் (33). கர்ப்பிணியான இவரது மனைவிக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானதையடுத்து, அண்மையில் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதனிடையே, சண்முகம் கடந்த வாரம் வி.துறையூர் துணை சுகாதார பெண் செவிலியரை செல்போனில் தொடர்பு கொண்டு மிகவும் தரக்குறைவாக பேசி, மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, சண்முகத்தை கைது செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் நலச் சங்கத்தினர் நேற்று (ஜூலை 8) திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களில் திடீரென பணிகளைப் புறக்கணித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு உத்தரவின்பேரில் சமயபுரம் காவல்துறையினர் சண்முகம் மீது இந்திய தண்டனைச் சட்டம் 294 (பி), 353, 506(i) ஆகிய பிரிவுகளின் கீழ் ஜூலை 8-ம் தேதி வழக்குப் பதிவு செய்தனர். ஆனால், இன்று (ஜூலை 9) பிற்பகல் வரை சண்முகம் கைது செய்யப்படவில்லை.
இதையடுத்து, திருச்சி உட்பட 4 மாவட்டங்களில் கிராம சுகாதார செவிலியர்கள் 2-வது நாளாக இன்றும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும், திருச்சியில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் காயத்ரி, துணைத் தலைவர் உமா காந்தி, செயலாளர் ஜெயசுந்தரி ஆகியோர் தலைமையில் செவிலியர்கள் 40 பேர் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசுவை நேரில் சந்தித்து முறையிட்டனர்.
முன்னதாக, தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் நலச் சங்கத்தினர் கூறும்போது, "ஆட்சியர் உத்தரவின்பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தாலும், சம்பந்தப்பட்ட நபரை இதுவரை கைது செய்யவில்லை. இதனால், 4 மாவட்டங்களில் சுமார் 800 பேர் தொடர்ந்து 2-வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். எங்கள் வேலைநிறுத்தம் காரணமாக கரோனா தடுப்பு மற்றும் தடுப்பூசி இடுவது, அன்றாட பரிசோதனை உட்பட பல்வேறு மருத்துவ சேவைகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
வேலைநிறுத்தம் செய்ய வேண்டும் என்பது எங்கள் எண்ணமல்ல. ஒரு பெண்ணை தரக்குறைவாக பேசியவரை இதுவரை கைது செய்யாமல் இருப்பதைக் கண்டித்தும், அவரை உடனே கைது செய்ய வலியுறுத்தியும், சம்பந்தப்பட்ட பெண் செவிலியருக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். சம்பந்தப்பட்ட நபரைக் கைது செய்யும் வரை போராட்டத்தைத் தொடர முடிவு செய்துள்ளோம்" என்றனர்.
