Published : 09 Jul 2020 04:26 PM
Last Updated : 09 Jul 2020 04:26 PM

வாகனங்கள் முழுமையாக இயங்காத 45 நாட்களுக்கான சாலை வரியை ரத்து செய்க: லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தல்

ஊரடங்கு காரணமாகத் தமிழகத்தில் ஏப்ரல், மே மாதங்களில் சுமார் 45 நாட்கள் லாரிகள் இயங்கவில்லை. இந்த நாட்களுக்கான சாலை வரியை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பொதுப் போக்குவரத்து முடக்கப்பட்டது. ஏப்ரல் 21-ம் தேதி தமிழக அரசு சில தளர்வுகளை அறிவித்தது. அதில், சரக்கு மற்றும் அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்லும் வாகனப் போக்குவரத்தைத் தொடங்கலாம் எனத் தெரிவித்திருந்தது.

ஆனால், லாரிகளை இயக்க ஓட்டுநர்கள் வரவில்லை. மேலும், சரக்குகளை ஏற்றி இறக்க, சுமைத் தொழிலாளர்களும் பணிக்கு வர மறுத்துவிட்டனர். இதில், வெளிமாநிலத்துக்கு லாரியை இயக்கி விட்டு வந்த ஓட்டுநர்கள் அவர்களது சொந்த ஊரில் தனிமைப்படுத்தப்பட்டனர். இதனால் தமிழகத்தில் சுமார் 90 சதவீத லாரிகள் 45 நாட்களுக்கு மேலாக இயக்கப்படவில்லை.

ஆனால், தமிழக அரசு ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கான சாலை வரியைச் செலுத்த வேண்டும். ஜூன் 30-ம் தேதிக்குள் செலுத்தாதவர்களுக்கு 100 சதவீத அபராதமும், பிந்தைய 3 மாதங்களுக்கான சாலை வரியையும் சேர்த்துச் செலுத்த வேண்டும் என அறிவித்தது. எனவே, சாலை வரிக்கான அபராதத் தொகையை ரத்து செய்ய வேண்டும். சாலை வரி செலுத்த செப்.30-ம் தேதி வரை காலஅவகாசம் வழங்க வேண்டும் என லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதற்கிடையே, சாலை வரி செலுத்தும் ஆன்லைன் பரிவாகன் சேவையில் தற்போது தமிழக வாகன எண்களைப் பதிவு செய்தால், அதில் வரி செலுத்துவதற்கான (Pay Your Tax) குறியீடு (Icon) இல்லாமல் உள்ளது. அதே நேரத்தில் மற்ற மாநில வாகனப் பதிவு எண்ணைப் பதிவு செய்தால் சாலை வரி செலுத்துவதற்கான குறியீடு உள்ளது. இதனால் தற்போது வரி செலுத்த முடியாமல் வாகனங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், வாகனப் புதுப்பித்தல் சான்று, வாகனங்களை விற்பனை செய்யவோ, வாங்கவோ முடியாது என பல இன்னல்களுக்கு லாரி உரிமையாளர்கள் ஆளாக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்துத் தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்க உறுப்பினர் பி.கணேஷ்குமார் கூறுகையில், “கரோனா அச்சம் காரணமாக கிராமங்களில் உள்ள ஓட்டுநர்கள் வேலைக்கு வரவில்லை. அதேபோல், அவர்கள் லாரிகளில் வெளிமாநிலத்துக்குச் சென்று வந்தால் மீண்டும் ஊருக்குள் வரக்கூடாது என்ற ஊர்க் கட்டுப்பாட்டால் ஓட்டுநர்கள் வேலைக்கு வரவில்லை. அவர்கள் பணிக்கு வந்தாலும், சுமை தூக்கும் தொழிலாளர்கள் வராததால், சரக்குகளை ஏற்றி, இறக்குவதில் சிரமம் ஏற்பட்டது.

இதனால் நாங்கள் சுமார் 45 நாட்களுக்கும் மேலாக லாரிகளை இயக்க முடியவில்லை. ஜூன் மாதத்தில் இருந்துதான் லாரிகள் முழுமையாக இயங்க முடிந்தது. தற்போது நாங்கள் 100 சதவீத அபராதத்தையும், வாகனங்கள் இயங்காத 45 நாட்களுக்கான சாலை வரியையும் ரத்து செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளோம். தமிழக அரசு எங்களது கோரிக்கைக்குச் செவி சாய்க்கும் என நம்புகிறோம்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x