Published : 09 Jul 2020 03:32 PM
Last Updated : 09 Jul 2020 03:32 PM

புதுச்சேரியில் சட்டவிரோத மதுபானக் கடைகள்: என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?- பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

புதுச்சேரியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 124 மதுபானக் கடைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை 4 வாரங்களுக்குள் அறிக்கையாகத் தாக்கல் செய்ய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியில் ஊரடங்கின்போது சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 100-க்கும் மேற்பட்ட மதுபானக் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. மேலும் 250 கடைகளின் உரிமங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டன.

இந்நிலையில் நிரந்தரமாக உரிமம் ரத்து செய்யப்பட்ட மதுபானக் கடைகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வெளிப்படைத்தன்மையுடன் பொதுமக்கள் அனைவரும் அறிந்துகொள்ள புதுச்சேரி அரசின் இணையதளம் மற்றும் செய்தித்தாள்களிலும், அந்த மதுபானக் கடைகளின் விவரங்களை வெளியிட உத்தரவிடக் கோரி பாமக காரைக்கால் மாவட்டச் செயலாளர் தேவமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஊரடங்கில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்த கடைகளின் விவரங்களை வெளியிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் கேட்கப்பட்டது.

இதற்கு மறுப்பு தெரிவித்த அரசுத் தரப்பு வழக்கறிஞர், 124 மதுபானக் கடைகள் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால் கடைகளின் விவரங்களை வெளியிட முடியாது என்றும் தெரிவித்தார்.

இதனையடுத்து, சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 124 மதுபானக் கடைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை 4 வாரங்களுக்குள் அறிக்கையாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை ஆகஸ்ட் 12-ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x