

சாத்தான் குளத்தைச் சேர்ந்த தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாகக் கோவில்பட்டி கிளைச் சிறையில் குற்றவியல் நீதித்துறை நடுவர் பாரதிதாசன் இன்று விசாரணை மேற்கொண்டார்.
சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் (58), அவரது மகன் பென்னிக்ஸ்(31) ஆகியோர் கடந்த மாதம் 19-ம் தேதி சாத்தான்குளம் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பென்னிக்ஸ் கடந்த 22-ம் தேதி இரவும், ஜெயராஜ் 23-ம் தேதி அதிகாலையும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக கோவில்பட்டி குற்றவியல் நீதித்துறை நடுவர் பாரதிதாசன், ஏற்கெனவே, கோவில்பட்டி கிளைச் சிறை, சாத்தான்குளம் காவல் நிலையம் ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். மேலும், திருச்செந்தூர் அரசு விருந்தினர் மாளிகையில் வைத்து இந்த வழக்கில் தொடர்புடையவர்களிடம் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) காலை 11.30 மணிக்கு கோவில்பட்டி கிளைச் சிறைக்குக் குற்றவியல் நீதித்துறை நடுவர் பாரதிதாசன் சென்றார். அங்கு தந்தை, மகன் இறப்பு தொடர்பாக, அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது பதிவு செய்யப்பட்ட ஆவணங்களைப் பார்வையிட்டு சிறைத்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார் எனக் கூறப்படுகிறது. சுமார் 20 நிமிட விசாரணைக்குப் பின் குற்றவியல் நீதித்துறை நடுவர் பாரதிதாசன் கிளைச் சிறையை விட்டு வெளியே வந்தார்.
தற்போது இந்த வழக்கு மத்தியப் புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டு அவர்கள் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், விரைவில் மத்தியப் புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் விசாரணை நடத்த வருவார்கள் எனத் தெரிகிறது.