

நீலகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நகர்ப்புறத்தைப் போல கிராமங்களிலும் தொற்று பரவி வருவது அப்பகுதி மக்களைத் திகைக்க வைத்திருக்கிறது.
நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 150 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. நேற்று 10 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இந்த எண்ணிக்கை 160 ஆக உயர்ந்திருக்கிறது. இவர்களில் 49 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். மீதமுள்ள 111 பேரில் 74 பேர் ஊட்டி அரசு மருத்துவமனையிலும், 7 பேர் குன்னூர் அரசு மருத்துவமனையிலும், 30 பேர் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், ‘இதுவரை ஊட்டி டவுன், காந்தல் என நகர்ப்புறப் பகுதியில்தான் தொற்று இருந்து வந்தது. இப்போது நீலகிரியின் பெரும்பகுதி கிராமங்களுக்கும் பரவி, மக்களை நிம்மதியில்லாமல் செய்திருக்கிறது’ எனும் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன.
நீலகிரியைப் பொறுத்தவரை, ஊட்டியின் மையப் பகுதியான காந்தலில்தான் முதன்முதலாகக் கரோனா தொற்றாளர் கண்டுபிடிக்கப்பட்டார். அங்கே அடுத்தடுத்து 9 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டதால் அந்தப் பகுதியே சீல் வைக்கப்பட்டது. அதையடுத்து நஞ்சநாடு பகுதியில் 2 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டு அப்பகுதி சீல் வைக்கப்பட்டது. தொடர்ந்து கூடலூர் அருகே உள்ள நாடுகாணி, குன்னூர், கொலக்கம்பை ஆகிய பகுதிகளிலும் தொற்றுப் பரவல் கண்டறியப்பட்டது.
இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல், எல்லநள்ளி அருகே உள்ள ஊசித் தொழிற்சாலை அலுவலர் ஒருவருக்குத் தொற்று ஏற்பட்டதுதான் கிராமங்களிலும் கரோனா பரவல் அதிகரிக்கக் காரணமானது. நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த சுமார் 750 பேர் இந்தத் தொழிற்சாலையில் பணியாற்றுகிறார்கள். அந்த அலுவலர் மூலம் அவர்களுக்கு வைரஸ் பரவி, அவர்கள் மூலம் அவர்கள் வசிக்கும் கிராமங்களுக்கும் பரவியிருக்கலாம் என்று கருதப்பட்டது. இதையடுத்து, அந்தக் கிராமப் பகுதிகளில் கரோனா பரிசோதனையைத் துரிதப்படுத்தினர் சுகாதாரத் துறை அலுவலர்கள்.
அதன் தொடர்ச்சியாக, இப்போது வரை பல்வேறு கிராமங்களில் 90 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கெதாளா, அருவங்காடு, பாய்ஸ் கம்பெனி, எல்லநள்ளி, செக்கட்டி, முக்கட்டி என 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் கரோனா அச்சத்தில் மூழ்கியிருக்கின்றன.
இதுகுறித்து நம்மிடம் பேசிய சுகாதாரப் பிரிவு அலுவலர்கள், “பல கிராமங்களில் கரோனா பரவுவதற்குக் காரணமாக இருந்த அந்த அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க ஆலோசிக்கப்படுகிறது. இதற்கிடையே, நேற்று மஞ்சூர் முள்ளிகூரில் 65 வயது மூதாட்டி ஒருவர் இறந்துபோனார். அதற்குப் பலரும் துக்கம் விசாரிக்கச் சென்று வந்தனர். அதன் பிறகுதான், இறந்தவருக்குக் கரோனா தொற்று இருந்தது உறுதியாகியிருக்கிறது. இதனால் அங்கு சென்று வந்தவர்களில் பலர் பரிசோதனை செய்துகொள்ள முன்வந்துள்ளனர். தவிர, லவ்டேல் பகுதியில் 5 பேருக்குத் தொற்று உறுதியாகி உள்ளது. இப்படி நாளுக்கு நாள் தொற்று அதிகரிப்பது நீலகிரியின் சூழலையே பாதித்துள்ளது” என்றனர்.
முன்னாள் கவுன்சிலரும் கரோனா தடுப்புப் பணியில் தன்னார்வலராகப் பணிபுரிபவருமான கேத்தியைச் சேர்ந்த ராஜேஷ் இதுகுறித்து நம்மிடம் பேசுகையில், ‘‘நீலகிரியில் மொத்தம் 150 பேருக்குக் கரோனா தொற்று சொன்னபோதே கேத்தி பஞ்சாயத்துக்கு உட்பட்ட எல்லநள்ளி, உல்லாடா, ஆர்கேஎஸ் மண்டியில் மட்டும் 56 பேர் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தனர். இது எல்லாமே ஊசி ஃபேக்டரி இருக்கும் பகுதிக்கு 3 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் வருபவை. இதில் பாதிப்பேர் குணமாகி வீட்டுக்கு வந்துவிட்டாலும், அவர்களையும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். இன்னமும் கிராமங்களில் பரிசோதனைகள் தொடர்கின்றன. முடிவு என்ன வரும் என்றுதான் தெரியவில்லை” என்றார்.