கரோனா பரிசோதனை: கிரண்பேடி, ராஜ்நிவாஸ் அதிகாரிகளுக்கு தொற்றில்லை; ஆளுநர் செயலகம் தகவல்

கிரண்பேடி: கோப்புப்படம்
கிரண்பேடி: கோப்புப்படம்
Updated on
1 min read

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மற்றும் அதிகாரிகளுக்கு கரோனா தொற்றில்லை என்று துணைநிலை ஆளுநரின் செயலகம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து நாள்தோறும் சுமார் 50-க்கும் மேற்பட்டோருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. கதிர்காமம் அரசு மருத்துவமனை, ஜிப்மர் ஆகியவற்றில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தனியார் மருத்துவக்கல்லூரி படுக்கைகளையும் பயன்படுத்த அரசு முயற்சி எடுத்து வருகிறது. .

இந்நிலையில், கரோனா தொற்று அரசு அலுவலகங்களிலும் தீவிரமாக பரவி வருகிறது. இதனால், அரசு அலுவலகங்கள் அடுத்தடுத்து 2 நாட்கள் மூடப்பட்டு வருகிறது. புதுவை சட்டப்பேரவை, நகராட்சி அலுவலகம், நகர அமைப்பு குழுமம், காவல்நிலையங்கள், போக்குவரத்துத்துறை ஆகியவற்றில் ஊழியர்களுக்கு ஏற்பட்ட தொற்றால் அலுவலகங்கள் மூடப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

2 நாட்களுக்குப் பிறகு அலுவலகங்கள் திறக்கப்பட்டது. தொற்று ஏற்பட்டவருடன் தொடர்பில் இருந்த ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், புதுவை துணைநிலை ஆளுநர் மாளிகையில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, துணைநிலை ஆளுநர் அலுவலகம் 48 மணிநேரத்திற்கு மூடப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. தொற்று ஏற்பட்டவருடன் தொடர்பில் இருந்த பலரும் தனிமைப்படுத்தப்பட்டனர். துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உள்ளிட்ட அதிகாரிகள், ஊழியர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் கரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது.

இந்த பரிசோதனை முடிவுகள் இன்று (ஜூலை 9) வெளியானது. இதில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, அதிகாரிகளுக்கு தொற்று இல்லை என முடிவுகள் வந்துள்ளது.

இதுகுறித்து, துணைநிலை ஆளுநரின் செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

"புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என முடிவுகள் வந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இருப்பினும், நெறிமுறையை கடைபிடிக்க வேண்டி முதன்மை தொடர்பில் இருந்த அனைத்து ஊழியர்களும் வீட்டு தனிமையில் இருப்பார்கள். துணைநிலை ஆளுநர் மாளிகையில் தனிமைப்படுத்தப்பட்ட அலுவலக ஊழியர்கள், அதிகாரிகளுக்கு நடத்தப்பட்ட சோதனையிலும் யாருக்கும் தொற்று இல்லை என முடிவுகள் வந்துள்ளது"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துணைநிலை ஆளுநர் அலுவலகம் மூடப்பட்டதால் ஊழியர்கள் உள்ளிட்ட யாரும் ஆளுநர் மாளிகைக்குள் அனுமதிக்கப்படவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in