

'அம்மா சாரிடபிள் டிரஸ்ட்' சார்பில் கரோனா நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் உணவை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு செய்தார்
மதுரையில் 4 இடங்களில் கரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இதனைத்தொடர்ந்து அவர்களுக்கு 'அம்மா சாரிடபிள் டிரஸ்ட்' சார்பில் மூன்று வேளையும் உணவு வழங்கப்படுகிறது. இதனை தொடர்ந்து, உணவு தயார் செய்யும் உணவுக்கூடத்தை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று (ஜூலை 9) நேரில் ஆய்வு செய்து, அங்கிருக்கும் பணியாளர்களிடம் அறிவுறுத்தியதாவது:
"தலையில் உறை அணிய வேண்டும். கைகளில் கையுறை அணிய வேண்டும். தொடர்ந்து, அடிக்கடி கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். உணவுக்கூடத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அடிக்கடி கிருமிநாசினியால் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்" என்று அறிவுறுத்தினார்.
இதையடுத்து, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோரின் ஆணைக்கிணங்க அதிமுக அம்மா பேரவை சார்பிலும், 'அம்மா சாரிடபிள் டிரஸ்ட்' சார்பிலும் கடந்த 4 ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக கரோனா சிகிச்சை பெறுபவர்களுக்கும், மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கும் காலை, மதியம், இரவு ஆகிய மூன்று வேளைகளிலும் புரதச்சத்து நிறைந்த சுகாதாரத்துடன் மருத்துவர்களின் ஆலோசனைப்படி உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இதில் காலை 11 மணிக்கு சூப் மற்றும் பாசிப்பருப்பு, மாலை 4 மணிக்கு இஞ்சி டீ, சுண்டல் வழங்கப்படுகிறது காலையில் வழங்கப்படும் உணவில் கேசரி, பொங்கல் அல்லது கிச்சடி, ஊத்தாப்பம், இட்லி, வடை, முட்டை, மிளகுப் பால், இரண்டு வகை சட்னி மற்றும் சாம்பார் வழங்கப்படுகிறது
மதிய உணவில் சாதம், சாம்பார், ரசம், புளிக்குழம்பு, மோர், சப்பாத்தி, பருப்பு டால், இரண்டு வகை காய்கறிகள், முட்டை, அப்பளம்,ஊறுகாய் ஆகியவை வழங்கப்படுகிறது.
இரவு உணவில் இட்லி, தோசை, கிச்சடி, சப்பாத்தி, இரண்டு வகை சட்னி, சாம்பார், குருமா மற்றும் மிளகு பால் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.
இன்றைக்கு முதல்வர் தமிழகம் முழுவதும் பல்வேறு போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, மதுரையில் சிறப்பு கவனம் எடுத்துக்கொண்டு தொடர்ந்து கண்காணித்து வருகிறார். இன்றைக்கு எதிர்க்கட்சிகள் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விஷமப் பிரச்சாரத்தை செய்து வருகின்றனர்.
முதல்வரின் அறிவுரைப்படி மக்களுக்கு தைரியம் ஊட்டும் வகையிலும், நம்பிக்கையூட்டும் வகையிலும் சுகாதாரச் செயலாளர் உள்ளிட்டோர் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதன் மூலம் மதுரை மக்கள் அச்சமில்லாமல் அரசுக்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.
மேலும், காய்ச்சல் கண்டறியும் குழுக்கள் வீடு வீடாக கண்காணித்து வருகின்றனர். விரைவில் மதுரை கரோனா இல்லாத மாவட்டமாக உருவாகும்"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.