பெரியாருக்கும், அண்ணாவுக்கும் ‘பாரத ரத்னா’ வழங்கவில்லையே: காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி வருத்தம்

பெரியாருக்கும், அண்ணாவுக்கும் ‘பாரத ரத்னா’ வழங்கவில்லையே: காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி வருத்தம்
Updated on
1 min read

பெரியாருக்கும் அண்ணாவுக்கும் பாரத ரத்னா வழங்கப்படவில்லையே என்று சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் காந்தியின் பேரனும், மேற்கு வங்க முன்னாள் ஆளுநருமான கோபாலகிருஷ்ண காந்தி வருத்தத்துடன் கூறினார்.

சென்னை பல்கலைக்கழகத்தின் 158-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நேற்று நடைபெற்றது. பட்டமளிப்பு விழாவை தலைமை யேற்று நடத்துவதாக இருந்த பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான கே.ரோசய்யா தவிர்க்க இயலாத காரணத்தினால் விழாவில் கலந்துகொள்ள இயலவில்லை. அவருக்குப் பதிலாக துணைவேந்தர் ஆர்.தாண்டவன் பட்டமளிப்பு விழாவை தலைமையேற்று நடத்தினார்.

விழாவில், மேற்கு வங்க மாநில முன்னாள் ஆளுநரும், காந்தியின் பேரனுமான கோபாலகிருஷ்ண காந்தி பட்டமளிப்பு விழா உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

அனைத்து மக்களையும் வரவேற்கும் சென்னை அறிவு மிகுந்த, கலாச்சாரம் நிறைந்த நகரம். அருங்காட்சியகங்களும், கலைக் கூடங்களும் நிறைந்த செழுமை வாய்ந்த நகரம். பொது வாக, சென்னை வாசிகள் நகரின் தூய்மையின்மைக்கு மாநகராட்சி மீதும், அரசும் மீதும் குறைசொல்வது வழக்கம். நகரை தூய்மையாக வைத்திருப்பதில் தங்களுக்கும் பங்கு உண்டு என்பதை அவர்கள் உணர வேண்டும்.

சாதி பாகுபாடுகளை தகர்த்தெறிவதில் தமிழகம் முன்மாதிரி மாநில மாக விளங்குகிறது. இதில் தந்தை பெரியாரின் பங்கு மிகவும் முக்கியமானது. சமுதாயத்தில் நலிந்த பிரிவினரை தூக்கிவிடும் வகையில் இட ஒதுக்கீடு கொள்கை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதை எண்ணி மிகவும் பெருமைப்படுகிறேன். மத நல்லிணக்கமும், சமயச் சார்பின்மையும் நிலவி வருவதற்கு காரணமான அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழகத்தைச் சேர்ந்த சர் சி.வி.ராமன், ராஜாஜி, காமராஜர், சி.சுப்பிரமணியம், எம்.எஸ்.சுப்புலட்சுமி, எம்.ஜி.ஆர்., அப்துல் கலாம் போன்றோருக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டு இருக்கிறது. அவர்கள் எல்லாம் தமிழகம் கடந்து தேசிய தலைவர்களாகிவிட்டனர். ஆனாலும், தந்தை பெரியாருக்கும், அண்ணாவுக்கும் பாரத ரத்னா வழங்கப்படாதது மிகவும் வருந்த தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.

பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்ற 97 மாணவ-மாணவிகளுக்கு பதக்கங்களும், பல்வேறு அறக்கட்டளை பரிசுகளும் வழங்கப்பட்டன. மொத்தம் 60 ஆயிரத்து 363 பேர் பட்டம் பெற்றனர். விழாவில், பதிவாளர் பா.டேவிட் ஜவகர், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி எஸ்.திருமகன் உள்பட பல்கலைக்கழக அதிகாரிகள், பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர் திரளாக கலந்துகொண்டனர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in