Published : 09 Jul 2020 09:31 AM
Last Updated : 09 Jul 2020 09:31 AM

தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு ஆறு மாத காலத்திற்கு சாலை வரி, காப்பீடு தொகை வசூலிக்க விலக்கு அளிக்க வேண்டும்; வாசன்

தனியார் ஆம்னி பேருந்து இயக்குநர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களின் தொழில் சிறக்க வழிவகை செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (ஜூலை 9) வெளியிட்ட அறிக்கை:

"கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 25-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இன்று வரை நடைமுறையில் உள்ளது. தற்போது பல்வேறு தளர்வுகளுடன் பல மாவட்டங்களில் அரசு பேருந்து மட்டும் இயங்கிகொண்டு இருக்கும் நிலையில் தனியார் ஆம்னி பேருந்து மற்றும் நகரம் மற்றும் புறநகர் பேருந்து போக்குவரத்து மட்டும் இதுவரை இயக்கப்படவில்லை. இதனால் தனியார் பேருந்து இயக்குநர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நடுத்தர, ஏழை, எளிய மக்கள் அதிகம் பயன்படுத்துவது சாலை போக்குவரத்தையே ஆகும். அதில் தனியார் ஆம்னி பேருந்துகளும் நகரம் மற்றும் புறநகர் பேருந்துகளும் பெரும் பங்கு வகிக்கின்றன. இத்துறையில் ஆம்னி பேருந்து சார்ந்து 2 லட்சம் குடும்பங்களும் நகரம் மற்றும் புறநகர் பேருந்து சார்பாக 5 லட்சம் குடும்பங்களும் இத்துறையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களாக எந்தவிதமான வருமானமும் இன்றி தனியார் பேருந்து போக்குவரத்து தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களும் அவர்களை சார்ந்த லட்சக்கணக்கான குடும்பங்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில், ஏப்ரல், மே, ஜுன் ஆகிய மாதங்களில் ஆம்னி பேருந்துகளுக்கு காலாண்டு சாலை வரியாக ஒரு பேருந்துக்கு ஒரு லட்சத்து எட்டாயிரம் செலுத்தும்படி அரசு கூறியுள்ளது. அப்படி குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்த முடியாதவர்களுக்கு 100 சதவிகிதம் அபராதத்துடன் மேலும் ஒரு லட்சம் ரூபாயும் சேர்த்து மொத்தம் இரண்டு லட்சத்து 8,000 ஆன்லைன் மூலமாக செலுத்தும்படி கூறப்பட்டுள்ளது. இது பாதிக்கப்பட்டவர்களை மேலும் பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது.

அதே போல், தனியார் நகரம் மற்றும் புறநகர் பயணிகள் பேருந்துக்கு காலாண்டு சாலை வரியாக சுமார் ரூ.27 ஆயிரம் முதல் ரூ.40 வரை செலுத்த வேண்டும் அரசு கூறியுள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களால் ஆர்டிஓ அலுவலகத்தில் ஆன்லைன் பிரச்சினையால் காலாண்டு வரி கட்ட முடியாதவர்களுக்கும் சாலை வரியை 100 சதவிகிதம் அபராதத்துடன் கட்ட வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

ஊரடங்கு காரணமாக இயங்காமல் இருக்கும் தனியார் ஆம்னி பேருந்துகளுக்கும், நகர புறநகர் பயணிகள் பேருந்துகளுக்கும் ஆறு மாதகாலத்திற்கு சாலை வரிக்கும் பேருந்துக்கான காப்பீட்டு தொகைக்கும் சாலை சுங்கவரி வசூலிக்கவும் விலக்கு அளிக்க வேண்டும்.

அதேபோல் ஆறு மாதங்களுக்கு வங்கிக்கு செலுத்த வேண்டிய தவணைத் தொகைக்கு வட்டியை தள்ளுபடி செய்யவும் தனியார் ஆம்னி பேருந்து மற்றும் நகர புறநகர் பயணிகள் பேருந்துகளை இயக்குபவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆகவே தமிழக அரசு இவர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்து நிறைவேற்றி அவர்கள் தொழில் சிறக்க வழிவகை செய்ய வேண்டும்"

இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x