

புதுச்சேரி மண்ணாடிப்பட்டு கொம்யூன் குமாரபாளையம் கிராமத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் தம்பதிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் கதிர்காமம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அதன்பின் அந்த தம்பதியரின் 20 மற்றும் 15 வயதான இரு மகள்களை பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் ஏற்றிச்சென்ற சுகாதாரத் துறை ஊழியர்கள் அங்கு விட்டுவிட்டு சென்றுவிட்டனர். அங்கு இருவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின், முடிவுகள் வர 2 நாட்களாகும் எனக்கூறிய மருத்துவ பணியாளர்கள், அதுவரை வீட்டுக்குச் சென்று தனிமையில் இருக்குமாறு தெரிவித்தனர். ஆனால், வீட்டுக்கு திரும்பிச் செல்ல வாகன ஏற்பாடு செய்யவில்லை.
இதனால் பல மணி நேரம் கதிர்காமம் அரசு மருத்துவமனையில் காத்திருந்த இருவரும் தங்கள் வீட்டருகே வசிப்போர் மற்றும் உறவினர்களை உதவிக்கு அழைத்தனர். கரோனா அச்சம் காரணமாக யாரும் வரவில்லை.
இதையடுத்து, கரோனா உதவி எண் 1077, 104 ஆகியவற்றை தொடர்புகொண்டபோது அலட்சியமான பதிலே கிடைத்துள்ளது. மதியத்துக்குப் பிறகு உறவினர் ஒருவர் கிராமத்திலிருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் வந்து, இருவரையும் அழைத்துச் சென்று வீட்டில் விட்டுள்ளார்.