

தமிழகத்தில் நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெற்று வரும் கரோனா தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள், வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:
முதல்வர் பழனிசாமி உத்தரவின்படி கரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக சென்னையில் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், அமைச்சர்கள் தலைமையில் பல்வேறு உயர் அலுவலர்களை கொண்ட சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அரசின் சிறப்பு நடவடிக்கையால் கடந்த ஜூன் மாதத்தில் நோய்த் தொற்று விகிதம் 24.2 சதவீதமாக இருந்தது. இது ஜூலை மாதத்தில் 18.2 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த 7-ம் தேதி ஒரேநாளில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 10,139 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு 1,203 பேருக்கு (11.87 சதவீதம்) தொற்று கண்டறியப்பட்டுள்ளது. முதல்வரின் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளால் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தொற்று கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.
இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறைச் செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் ஹர்மந்தர் சிங், சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ், நகராட்சி நிர்வாக ஆணையர் கா.பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.