சென்னையில் கரோனா கட்டுப்பாட்டு பணிகள்: 15 மண்டல சிறப்பு அதிகாரிகளுடன் தலைமைச் செயலர் ஆலோசனை

சென்னையில் கரோனா கட்டுப்பாட்டு பணிகள்: 15 மண்டல சிறப்பு அதிகாரிகளுடன் தலைமைச் செயலர் ஆலோசனை
Updated on
1 min read

சென்னையில் கரோனா பரவல் கட்டுப்பாட்டு பணிகள் தொடர்பாக 15 மண்டல சிறப்பு அதிகாரிகளுடன் தலைமைச்செயலர் கே.சண்முகம் நேற்று ஆலோசனை நடத்தினார்.

சென்னையில் கரோனா பரவல் அதிகரித்து வந்தநிலையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களுக்கும் தனித்தனியாக சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். ஒருங்கிணைப்பு அதிகாரியாக தற்போதைய சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், கூடுதல் ஒருங்கிணைப்பு அதிகாரியாக மின்வாரிய தலைவரும் நில நிர்வாக ஆணையருமான பங்கஜ்குமார் பன்சல் ஆகியோரும் நியமிக்கப்பட்டனர்.

இவர்கள் தவிர, 5 மூத்த ஐபிஎஸ்அதிகாரிகளும் ஒருங்கிணைப்பு பணிகளுக்காக நியமிக்கப்பட்டனர். மேலும், 6 அமைச்சர்களும் கண்காணிப்பு பணிக்காக நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில், ஜூலை 5-ம் தேதியுடன் முடிவுக்கு வந்த முழு ஊரடங்கானது சென்னையில் நல்ல பயனை அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் 2500-க்கு மேல் தினசரி தொற்று கண்டறியப்பட்டு வந்த நிலையில், தற்போது சில தினங்களாக படிப்படியாக குறைந்து நேற்று 1200 என்ற அளவிலேயே தொற்று பதிவாகியுள்ளது.

இருப்பினும் கடந்த ஜூலை 6-ம்தேதி முதல் தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருவதால், தொற்று எண்ணிக்கை மீண்டும் உயர்ந்து விடக்கூடாது என்பதில் தமிழக அரசு மிகுந்த கவனமாக உள்ளது. இதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் விதமாக நேற்று தலைமைச் செயலர் தலைமையில் 15 மண்டல அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், டிஜிபி ஜே.கே.திரிபாதி, நகராட்சி நிர்வாக ஆணையர் ஹர்மந்தர் சிங், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், நில நிர்வாக ஆணையர் பங்கஜ்குமார் பன்சல்,மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது, மண்டல வாரியாககரோனா பரவல் குறித்தும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் மற்றும் தொற்று பரவல் எண்ணிக்கை அதிகரிக்காமல் இருக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது, வீடுவீடாக நடத்தப்பட்டு வரும் காய்ச்சல் பரிசோதனை உள்ளிட்டவற்றை தீவிரப்படுத்தவும், இதர நோய்கள் உள்ள வயதானவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கவும் தலைமைச் செயலர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in