Published : 09 Jul 2020 06:54 AM
Last Updated : 09 Jul 2020 06:54 AM

நோய் எதிர்ப்பு சக்திமிக்க மோர் உள்ளிட்ட ஆவின் நிறுவனத்தின் 5 தயாரிப்புகள்: முதல்வர் பழனிசாமி அறிமுகப்படுத்தினார்

நோய் எதிர்ப்பு சக்தி மிக்க மோர்,சாக்கோ மற்றும் மேங்கோ லஸ்சிஉள்ளிட்ட 5 ஆவின் பொருட்களை முதல்வர் பழனிசாமி அறிமுகப்படுத்தினார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மக்களுக்கு பயன் அளிக்கும்

ஆவின் நிறுவனம் சார்பில், அவ்வப்போது பால் உப பொருட்கள் அறிமுகப்படுத்தப் படுகின்றன. அந்த வகையில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆவின் மோர், சாக்கோ மற்றும் மேங்கோ லஸ்சி, நீண்ட நாட்கள் கெடாத சமன்படுத்தப்பட்ட பால், ஆவின் டீமேட் பால் ஆகிய 5 புதிய பொருட்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றை முதல்வர் பழனிசாமி அறிமுகம் செய்து வைத்தார்.

இதில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் ஆவின் மோர், கரோனா வைரஸ் தொற்று காலத்தில் மக்களுக்கு பயன்படும் வகையில் இஞ்சி, எலுமிச்சை, துளசி, மிளகு,சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு போன்ற நோய் எதிர்ப்பு சக்தி மிக்கபொருட்கள் சேர்த்து தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மோர் 200 மி.லி. பாட்டில் ரூ.15-க்கு விற்கப்படும்.

90 நாட்கள் கெடாத பால்

மேலும், சாக்லேட் சுவையில்சாக்கோ லஸ்ஸி, மாம்பழ சுவையுடன் மாம்பழ லஸ்சி ஆகியவை 200 மிலி பாட்டிலில் ரூ.23-க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், அறை வெப்பநிலையில் 90 நாட்கள்வரை கெடாத வண்ணம், குளிர்சாதன பெட்டியில் வைக்க தேவையில்லாத சமன்படுத்தப்பட்ட பால்அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பால் 500 மி.லி. ரூ.30-க்கு விற்கப்படும்.

இதுதவிர, உணவகங்கள், தேநீர் கடைகள், விடுதிகள் மற்றும் சமையல் வல்லுநர்களின் தேவையைக் கருத்தில் கொண்டு அதிக கொழுப்பு சத்து கொண்ட ‘டீமேட்’ என்ற புதிய பால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் ‘டீமேட்’பாலின் விலை ரூ.60 ஆகும்.

புதிய பொருட்கள் அறிமுக விழாவில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, தலைமைச்செயலர் கே.சண்முகம், பால்வளத் துறை செயலர் கே.கோபால், ஆவின் நிர்வாக இயக்குநர் எம்.வள்ளலார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x