Last Updated : 29 Sep, 2015 02:45 PM

 

Published : 29 Sep 2015 02:45 PM
Last Updated : 29 Sep 2015 02:45 PM

வால்பாறையில் ஆபத்தான குடியிருப்புகளில் தேயிலை எஸ்டேட் தொழிலாளர்கள்: கான்கிரீட் வீடுகள் கட்டித்தர கோரிக்கை

வால்பாறை தேயிலை எஸ்டேட் தொழிலாளர்கள், 75 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மண்ணால் கட்டப்பட்ட தகரக் கொட்டகைகளிலும், ஓடு, சிமென்ட் சீட் வீடுகளிலும் பாதுகாப்பில்லாமல் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து வால்பாறையில் உள்ள தமிழ்நாடு தேயிலை தோட்டத் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளரும், தோட்டத் தொழிலாளர் வீட்டு வசதி வாரிய ஆலோசனைக் குழு உறுப்பினருமான எஸ்.மோகன் சென்னையில் உள்ள தொழிலாளர் ஆணையருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து மோகன் கூறியதாவது:

வால்பாறையிலும், நீலகிரியிலும் உள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு கட்டிக்கொடுக்கப்பட்ட குடியிருப்புகள் மிகவும் பழமையானவை. தேயிலைக் காடுகளும், தேயிலை எஸ்டேட்டுகளும் எப்போது உருவாக்கப்பட்டதோ, தேயிலை தொழிலாளர்கள் எப்போது இங்கே தங்க வைக்கப்பட்டார்களோ, அப்போதிருந்து இந்த குடியிருப்புகள் 90 சதவீதம் அப்படியே உள்ளன.

வால்பாறையை பொறுத்தவரை 2002-ம் ஆண்டு கணக்கின்படி 75 ஆயிரம் வாக்காளர்கள் இருந்தனர். தற்போது 52 ஆயிரமாக குறைந்து விட்டனர். அப்போது நிரந்தரம், தற்காலிகம் என்ற கணக்கில் 40 ஆயிரம் தொழிலாளர்கள் இருந்தனர். தற்போது 20 ஆயிரமாக குறைந்துவிட்டனர்.

தேயிலைத் தோட்டத் தொழிலாளிக்கு கூலி மிகவும் குறைவு. காட்டெருமை, சிறுத்தை புலி, கரடிகள், யானைகள், அட்டைப்பூச்சி, கொடிய விஷப் பாம்புகள் மத்தியில் இவர்கள் வாழ வேண்டியுள்ளது. பாதுகாப்பில்லாத இந்த வீடுகளில் வாழ்வது சாத்தியம் இல்லை என்றுதான் அனைவரும் சமநிலப் பகுதிக்குச் சென்று கொண்டிருக்கின்றனர்.

அரசு தேயிலைத் தோட்டக் கழகம் தவிர, பெரிய குரூப் தேயிலை எஸ்டேட்டுகள் 7, சிறிய தேயிலை எஸ்டேட்டுகள் சுமார் 15 உள்ளன.

இதில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சுமார் 7 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன. அவற்றில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள், காட்டு விலங்குகளால் தாக்குதலுக்குள்ளாகி குடியேற முடியாமல் உள்ளன. மீதமுள்ள வீடுகளில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் காட்டு விலங்குகளால் தாக்கப்பட்டு சீர் செய்யப்பட்டவை. இந்த வீடுகளில் சுகாதாரமான கழிப்பறைகளோ, குடிநீரோ இல்லை. குடியிருப்புகளுக்குச் செல்ல நடைபாதைகள் இல்லை.

இந்த வீடுகளை மாற்றி தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான கான்கிரீட் வீடுகள் கட்டித்தருமாறு நீண்டகாலமாக கோரிக்கை வைத்து வருகிறோம். சமீபத்தில்தான் தோட்டத் தொழிலாளர்கள் வீட்டு வசதி ஆலோசனை வாரியக் குழுவில் இந்த விஷயம் பரிசீலனைக்கு வந்தது.

இதுபோன்ற விஷயங்களை கூட்டத்தில் விவாதித்து முடிவெடுக்கும் விதமாக கோரிக்கை மனு அனுப்பும்படி தோட்டத் தொழிலாளர் ஆலோசனை வாரியம் குழு கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது. அந்த குழுவின் தலைவராக தொழிலாளர் துறை மற்றும் வேலைவாய்ப்பு அரசுத் துறை செயலர் உள்ளார். அரசு அதிகாரிகள் தரப்பில் 6 பேரும், எஸ்டேட் தொழிலதிபர்கள் 4 பேரும், தொழிலாளர்கள் தரப்பு பிரதிநிதிகள் 4 பேரும் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையிலேயே இந்த கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது. நிச்சயம் தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x