Published : 08 Jul 2020 10:27 PM
Last Updated : 08 Jul 2020 10:27 PM

கரோனா தொற்றினால் மரணமடைவர்களின் உடல் அடக்கம்: ஐசிஎம்ஆர் விதிமுறைகள் என்ன?- அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு 

கரோனா தொற்று காரணமாக பலியானவர்களின் உடல் அடக்கம் தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் விதிமுறைகளை தமிழக அரசு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா தொற்று காரணமாக பிரபல நரம்பியல் மருத்துவர் சைமன் மரணமடைந்தார். 30 ஆண்டுகளாக மக்களுக்கு சேவை செய்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய கீழ்ப்பாக்கம் கல்லறைப் பகுதிக்கு மருத்துவமனை ஊழியர்கள் ஆம்புலன்ஸில் எடுத்து சென்றனர்.

அப்போது, மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், உடலை வேலங்காடு மயானத்துக்கு எடுத்துச் செல்ல முற்பட்ட போது, அங்கு அவரது உடலை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ் மீது அப்பகுதியில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்டோர் திரண்டு தாக்குதல் நடத்தினர். இதனால், அரசு ஊழியர்களும் காயமடைந்தனர்.

ஆம்புலன்ஸ் கண்ணாடி உடைக்கப்பட்டு ஓட்டுநர்கள் தலையில் பலத்த காயத்துடன் பிணத்துடன் திரும்பினர். பின்னர் போலீஸார் உதவியுடன் புதைத்தனர். இச்சமபவத்துக்கு காரணமான 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தனியார் தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல் குமார் அடங்கிய அமர்வு, கரோனா தொற்றால் பலியானவர்களின் உடல்களை கையாள்வது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சில வழிகாட்டி விதிமுறைகளை அறிவித்துள்ளதாகச் சுட்டிக் காட்டியுள்ளது.

கண்ணியமான நல்லடக்கம் என்ற உரிமை, புனிதமான மருத்துவ தொழில் செய்தவரின் உடலுக்கு வழங்கப்படவில்லை எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், கடமையைச் செய்யச் சென்ற அதிகாரிகள் தாக்கப்பட்டிருக்கிறார்கள் எனவும், குடிமக்கள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தினர்.

எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தமிழக தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், சுகாதாரத் துறை செயலாளர், மாநகராட்சி ஆணையர், சென்னை மாநகர காவல் ஆணையர் ஆகியோர் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஆர்.ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது, அப்போது நீதிபதிகள், கரோனா தொற்றினால் மரணமடைவர்களின் உடலை அடக்கம் செய்வது தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் விதிமுறைகளை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 10-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x