

கன்னியாகுமரி மீனவர்கள் கேரள பகுதிக்கு சென்று மீன்பிடிக்க ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் மீண்டும் அனுமதி அளிக்ககோரி கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி எழுதியுள்ளார்.
கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
‘‘கரோனா பரவல் காரணமாக நாடுமுழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கேரளாவில் கடல்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 350 மோட்டர் படகுகளும், 750 நாட்டுப் படகுகளும் கேரளாவில் உள்ள பல்வேறு மீன்பிடி துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விழைகிறேன்.
ஊரடங்கால் அவர்கள் கேரளாவுக்கு மீன்பிடிக்க செல்ல முடியாமலும் வாழ்வாதாரம் முடங்கியுள்ளதுடன் அங்கு நிறுத்தப்பட்டுள்ள தங்கள் படகுகளை செப்பனிடவும் வாய்ப்பின்றி தவித்து வருகின்றனர்.
கேரளாவில் தமிழக மீனவர்கள் முடங்கியுள்தால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 3 மாத காலமாக 25 ஆயிரம் மீனவ குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளன. கேரளாவுக்கு சென்று மீன்பிடிக்க அனுமதி பெற வேண்டி கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவ அமைப்புகள் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன.
கேரளாவில் நிறுத்தப்பட்டுள்ள படகுகளை உடனடியாக பழுது பார்ப்பதற்கு கன்னியாகுமரி மீனவர்களுக்கு அனுமதி தர வேண்டும். ஆகஸ்ட் 1 -ம் தேதி முதல் மீனவர்கள் கேரளாவில் மீன் பிடிக்க அனுமதி அளிக்க வேண்டும். அதற்கான அனுமதி சீட்டை வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.’’
இவ்வாறு கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.