Published : 08 Jul 2020 09:13 PM
Last Updated : 08 Jul 2020 09:13 PM

பிளஸ் 2 இறுதித்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 27-ல் தேர்வு: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

அரசுப் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் ஜூலை 13-ம் தேதி முதல் தொடங்கப்படும். இறுதித்தேர்வு எழுதாமல் விடுபட்ட பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு ஜூலை 27-ம் தேதி நடத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இன்று காலை கோபிச்செட்டிப்பாளையத்தில் பேட்டி அளித்த அமைச்சர் செங்கோட்டையன்,
“தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் வரும் 13 ஆம் தேதி முதல் ஆன்லைன் கல்வி முறை தொடங்கப்படும், தனியார் பள்ளிகள் போன்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைனில் பாடம் கற்பிக்கப்படும்.
பாடப்புத்தகங்கள் வெளியானவுடன் ஆன்லைன் வகுப்புகள் ஆரம்பமாகிவிடும், தொலைக்காட்சி மூலமாகவும் பாடம் கற்பிக்க ஏற்பாடு செய்யப்படும். விடுபட்ட பிளஸ்2 தேர்வு தேதி இன்று அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அமைச்சர் செங்கோட்டையன் இன்று மாலையில் வெளியிட்ட அறிவிப்பு:

“தமிழ்நாட்டில் 2019-2020 ஆம் கல்வியாண்டிற்கான 12 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு மார்ச் 2020-ல் நடத்தி முடிக்கப்பட்டது. மார்ச் 24 அன்று நடத்தப்பட்ட 12 ஆம் வகுப்பு இறுதி நாள் பொதுத் தேர்வில் சில மாணவர்கள் தேர்வு எழுத முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக பெற்றோர் மற்றும் மாணவர்கள் விடுத்த கோரிக்கையினை முதல்வர் பரிசீலித்து, மார்ச் 24 அன்று தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மட்டும் தனியாக வேறொரு நாளில் தேர்வு நடத்தப்படும் என அறிவித்தார். அதன்படி, இத்தேர்வினை ஜூலை 27-ம் தேதி (திங்கட்கிழமை) அன்று நடத்திட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

மாணவர்கள் அவர்தம் சொந்தப் பள்ளிகளிலேயே தேர்வு எழுத தேர்வு மையங்கள் அமைக்கப்படும். இத்தேர்விற்கான புதிய நுழைவுச்சீட்டுகளை மாணவர்கள் தாங்களே www.dge.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவோ அல்லது அவரவர் பள்ளிகளிலோ பதிவிறக்கம் செய்து ஜூலை 13-ம் தேதி முதல் ஜூலை 17-ம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம். தனித் தேர்வர்கள் தங்களது நுழைவுச்சீட்டுகளை இத்தேதிகளில் சம்பந்தப்பட்ட தனித்தேர்வு மையங்களில் சென்று பெற்றுக்கொள்ளலாம்.

தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் செல்வதற்காக, தேவைக்கேற்ப போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படும். நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்படாது. நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வசிக்கும் தேர்வர்கள் எவரேனும் இருப்பின், அவர்கள் தேர்வு மையங்களில் தனி அறைகளில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.

அரசு வெளியிட்டுள்ள கோவிட்-19 நோய்த்தொற்று கட்டுப்பாடு தொடர்பான நிலையான செயல்பாட்டு வழிமுறைகள் அனைத்தும் இத்தேர்வு நடத்துவதில் பின்பற்றப்படும்”.

இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x