கோவிட் நோய்ப் பரவல் சிறிதளவும் கட்டுப்படுத்தப்படவில்லை: எம்ஆர் கே பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
கோவிட்-19 நோய்ப் பரவலைத் தடுப்பதில் அதிமுக அரசின் மேலாண்மை குறித்து முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், சட்டப்பேரவை திமுக உறுப்பினருமான எம்ஆர்கே பன்னீர்செல்வம் ஜூம் செயலி மூலம் இன்று ( 8-ம் தேதி) மதியம் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தினார்.
அப்போது அவர் கூறியதாவது:
"தமிழக அரசு நோய்ப் பரவல் குறைவாக இருந்த மார்ச் மாதத்திலேயே அதிக அளவிலான சோதனையை நடத்தியிருக்க வேண்டும். மாநிலத்தின் நலனுக்காக திமுக வழங்கிய பல ஆக்கபூர்வமான ஆலோசனைகளை ஆட்சியிலிருக்கும் அரசு புறக்கணித்தது.
இந்த நெருக்கடியிலிருந்து மீண்டு வர, அரசுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடக்கத்தில் இருந்தே கூறிவருகிறார். மக்களின் முக்கியப் பிரச்சினைகளையும் அவர்களின் தேவைகளையும் தொடர்ந்து அரசுக்குத் தெரியப்படுத்தி வருகிறோம். ஆனால் ஆளும் அரசு, தனது அரசியல் லாபத்திற்காக நோய்த் தடுப்புப் பணிகளில் மற்ற கட்சியினருடன் இணைந்து பணியாற்ற விருப்பமில்லை.
இந்த அரசு ஊரடங்கு விதிமுறைகளை முறையாக அமல்படுத்தவில்லை. நோய்ப் பரவலைத் தடுப்பதில் அரசுக்குத் தனிப்பட்ட திட்டம் இல்லாமல் மத்திய அரசின் வழிமுறைகளுக்காகக் காத்திருந்தது. தமிழக மக்கள் தங்கள் வாழ்நாளில் முன்னெப்போதும் இல்லாத அளவில் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் நோய்ப் பரவல் சிறிதளவும் கட்டுப்படுத்தப்படவில்லை. மாநிலத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளதால், பலரின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவிவரும் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு, மக்களுக்கு வழங்கப்படும் அரசின் நிவாரணத் தொகையை, ஆயிரம் ரூபாயிலிருந்து 5 ஆயிரமாக ரூபாயாக உயர்த்தி வழங்குமாறு திமுக கோரிக்கை விடுத்தது. மக்களை நாடி மருத்துவர்கள் செல்ல வேண்டும். ஊரடங்கு அரசின் அலட்சியத்தால் கேலிக்கூத்தாக மாறிவருகிறது. கரோனா சமூகத் தொற்றாகப் பரவி வருகிறது.
இந்த அரசு மக்களின் கோரிக்கைகளைக் கேட்காமல், தங்களுக்குத் தோன்றியதையே தொடர்ந்து செய்து வருகிறது".
இவ்வாறு எம்ஆர்கே பன்னீர்செல்வம் கூறினார்.
