

மதுரை காமராஜர் பல்கலைக்கழக விடுதிகளில் அமைக்கப்பட்ட ‘கரோனா’ வார்டில் சித்த மருத்துவர்கள் தினமும் நோயாளிகளுக்கு சித்த மருந்து மாத்திரைகளுடன் மனநல ஆலோசனை வழங்கி யோகா பயிற்சியும் வழங்கி வருகின்றனர்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக விடுதிகள் தற்போது கரோனா சிகிச்சை முகாமாக மாற்றப்பட்டு நோயாளிகளுக்கு அலோபதி மற்றும் சித்த மருத்துவ ஒருங்கிணைந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அறிகுறிகளின்றி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மதுரையைச் சார்ந்த 108 நோயாளிகள் இந்த முகாமில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு நோய்த்தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக தமிழக அரசின் ஆரோக்கியம் திட்டத்தின்படி வட்டார மருத்துவர்கள் உமா மகேஸ்வரி, ஆனந்த ஜோதி மேற்பார்வையில் சித்த மருத்துவர்கள் சுரேஷ் பாபு, புனிதா ஆகியோர் நோயாளிகளுக்கு சித்த மருத்துவ சேவையை வழங்கி வருகின்றனர்.
இதுகுறித்து சித்த மருத்துவர் சுரேஷ் பாபு கூறியதாவது:
தமிழக அரசின் ஆரோக்கியம் திட்டத்தின்படி அமுக்கரா சூரண மாத்திரை, பிரம்மானந்த பைரவ மாத்திரை, வசந்த குசுமாகர மாத்திரை, ஆடாதோடை மணப்பாகு, தாளிசாதி சூரண கேப்ஸுல், நெல்லிக்காய் லேகியம், திப்பிலி ரசாயனம், கபசுரக் குடிநீர் ஆகிய சித்த மருந்துகள் இருவேளை வழங்கப்படுகின்றன.
நோயாளிகளின் மனஅழுத்தம் போக்க சித்த மருத்துவர்களால் மனநல ஆலோசனைகள், திருமூலர் யோகா வழங்கப்படுகின்றன. நோய் பற்றிய விழிப்புணர்வு, நோயிலிருந்து மீள மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய விளக்கம் அளிக்கப்படுகின்றன.
பஞ்ச பூத அடிப்படையில் ஐய நோயான கொரோனா நோய் பாதிப்பைக் குறைக்க இனிப்பு,புளிப்பு, உவர்ப்பு நீக்கி கசப்பு,கார்ப்பு, துவர்ப்பு சுவைகளை அதிகம் உண்ண வேண்டியதன் அவசியம் எடுத்துரைக்கப்படுகிறது.
உணவில் சேர்க்கவேண்டிய மூலிகைகள் மற்றும் திரிதோட சமனப் பொருட்கள் பற்றி விளக்கப்படுகிறது. "சிறுஉணவே பெருமருந்து" என்பதன் அடிப்படையில் நோயுற்ற காலத்தில் உண்ணவேண்டிய அன்னப்பால்கஞ்சி, புளி நீக்கிய உணவுகள் பற்றி அறிவுறுத்தப்படுகிறது. வேம்பு ஆன்டி-வைரல் தன்மை கொண்டது என்பதால் அதன் துளிர் மற்றும் பூவினை அரைத்தும், துவையல் செய்தும் உண்ண கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வாய் கொப்பளித்தல், நசியம், புகை, வேது, திரி, திருமூலர் வாசிப்பயிற்சி, ஆசனங்கள், தியானம் போன்ற செய்முறை விளக்கங்களும் சித்த மருத்துவர்களால் அளிக்கப்படுகின்றன.
நோயாளர்கள் தலைக்கு நொச்சித் தைலமும், உடலுக்கு அரக்குத் தைலமும் தேய்த்து நலுங்கு மாவு கொண்டு குளிக்க அறிவுறுத்தப்படுகின்றனர். நோயாளர்கள் சமுதாயத்தில் கரோனா நோய்க்கு எதிரான போரில் செயல் வீரர்களாகப் பணியாற்ற ஊக்குவிக்கப்படுகின்றனர்.
மருந்துகளுடன் பயிற்சிகள், ஆலோசனைகள், விழிப்புணர்வு, நம்பிக்கை இவை அனைத்தும் கிடைப்பதால் நோயாளர்கள் பயமின்றி நேர்மறை எண்ணங்களுடன் கரோனாவை எதிர்கொள்கின்றனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.