Last Updated : 08 Jul, 2020 07:20 PM

 

Published : 08 Jul 2020 07:20 PM
Last Updated : 08 Jul 2020 07:20 PM

வாட்ஸ் அப் வீடியோ அழைப்பு மூலம் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு ஆலோசனை வழங்கும் கோவை மாநகராட்சி நிர்வாகத்தினர்

கோவை மாநகரில் கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநகரில் இதுவரை 665-க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 257 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 408-க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாநகரில் தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் 30 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மாநகரில் கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக, டெங்கு தடுப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த 800 ஒப்பந்தப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள், சுய உதவிக்குழுவினர் ஆயிரம் பேர் என மொத்தம் 1,800 பேர் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் மாநகர் முழுவதும் நோய் தடுப்புப் பணிக்காக களமிறக்கி விடப்பட்டுள்ளனர்.

இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளில் வீடு வீடாகச் சென்று, அந்த வீட்டில் வசிப்பவர்கள் பெயர், வயது விவரம், அவர்களின் உடல்நிலை விவரம், வெளியூர்களில் இருந்து வந்தவர்களின் விவரம், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ளவர்கள் விவரம் போன்றவற்றைச் சேகரித்து வருகின்றனர். மாநகரில் உள்ள 84 மாநகராட்சிப் பள்ளிகளில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்தந்தப் பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கரோனா நோய்த் தடுப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வீடு வீடாகச் சென்று விவரம் சேகரிக்கும் ஒப்பந்த ஊழியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளியில் தினந்தோறும் மாலை அந்த விவரங்களை ஒப்படைத்து வருகின்றனர். அதைப் பரிசீலனை செய்து, வகைப்படுத்தி பிரித்து உயரதிகாரிகளுக்கு ஆசிரியர்கள் அனுப்புகின்றனர்.

வீடியோ அழைப்பு

மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘மாநகரில் 2,200-க்கும் மேற்பட்டோர் வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இங்கு மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மாநகராட்சி சுகாதாரத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கட்டுப்பாட்டு அறைகளில் உள்ள ஆசிரியர்கள், மாநகராட்சி ஊழியர்களிடம் அந்தந்தப் பகுதிகளில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட வீடுகள், தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள், அங்கு வசிப்பவர்களின் பெயர், வயது விவரம், செல்போன் எண் ஆகியவை இருக்கும். கட்டுப்பாட்டு அறைகளில் உள்ள ஆசிரியர்கள், ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களை திடீரென வாட்ஸ் அப் வீடியோ அழைப்பு மூலம் தொடர்பு கொண்டு பேசுகின்றனர்.

அந்த அழைப்பில் அவரது குடும்பத்தினரையும் சந்தித்துப் பேசுகின்றனர். இதன் மூலம் தனிமைப்படுத்தப்பட்ட நபர் வீடுகளில்தான் உள்ளனரா என்பதை உறுதி செய்கின்றனர். அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட நபர் வீடுகளில் இல்லை என்று தெரியவந்தால், காவல்துறையில் புகார் அளிக்கப்படுகிறது. மேலும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்கு மன அழுத்தத்தைப் போக்கும் வகையில் வாட்ஸ் அப் வீடியோ அழைப்பு மூலம் ஆலோசனைகள் கூறப்படுகின்றன. வாட்ஸ் அப் வீடியோ அழைப்பு மூலம் உறுதி செய்து, ஆலோசனை வழங்கி வரும் திட்டம் கடந்த சில தினங்களுக்கு முன்பு இருந்து மாநகராட்சி நிர்வாகத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x