

நாடாளுமன்ற உறுப்பினருக்கான தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு, ரூ 1.69 லட்சத்தில் மூன்று சக்கர வாகனங்களை மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் இன்று வழங்கினார்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக் குழு அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
''கோவை மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது முதல், தொடர்ந்து மக்கள் பணியாற்றி வருகிறார் பி.ஆர்.நடராஜன். கரோனா பேரிடர் காலத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவது, சுகாதார ஊழியர்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்குவது என அவர் தொடர்ந்து இயங்கி வருகிறார். மேலும் தொகுதி மேம்பாட்டு நிதியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை விரைந்து நிறைவேற்றிடவும் தொடர்ந்து களப்பணியாற்றி வருகிறார்.
இதன் ஒருபகுதியாக 2020-க்கான மக்களவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 8 மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்களை வழங்குவதற்காக நிதி ஒதுக்கீட்டைச் செய்திருந்தார். அதில் இன்று மூன்று மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.69 லட்சம் மதிப்பிலான மூன்று சக்கர வாகனங்களை அவர் வழங்கினார்.
கோவை காந்திபுரம் 2-வது வீதியில் உள்ள மக்களவை உறுப்பினர் அலுவலகத்தின் முன்பாக நடைபெற்ற இந்நிகழ்வில், சிங்காநல்லூர் கள்ளிமடையைச் சேர்ந்த பாலன், சின்னியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பிரபு, பெரியகுயிலைச் சேர்ந்த தங்கவேல் ஆகியோர் மூன்றுசக்கர வாகனங்களைப் பெற்றுக்கொண்டனர்.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சந்திரசேகர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும், மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர் வி.ராமமூர்த்தி மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்''.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.