Last Updated : 08 Jul, 2020 06:54 PM

 

Published : 08 Jul 2020 06:54 PM
Last Updated : 08 Jul 2020 06:54 PM

முதலீடு செய்தவருக்குப் பணத்தை திருப்பித் தராமல் தாக்கியதாக 'எல்பின்' நிறுவன உரிமையாளர் உட்பட 9 பேர் மீது வழக்குப் பதிவு

எல்பின் உரிமையாளர் சு.ராஜா

திருச்சி

முதலீடு செய்தவருக்குப் பணத்தைத் திருப்பித் தராமல் தாக்கியதாக 'எல்பின்' நிறுவன உரிமையாளர் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மன்னார்புரத்தில் 'எல்பின் இ-காம்' என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளரான சு.ராஜா, அறம் மக்கள் நலச் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் கீழாநிலையைச் சேர்ந்த நாகப்பன் மகன் ராஜ்குமார் (30) என்பவர் திருச்சி கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.

அதில், "எல்பின் நிறுவனத்தில் ரூ.45 லட்சம் முதலீடு செய்தேன். 10 மாதங்களில் அதனை இரட்டிப்பாக்கி ரூ.90 லட்சம் தருவதாகக் கூறினர். அதற்காக காசோலைகளை அளிந்திருந்தனர். தற்போது இந்த நிறுவனத்தின் மீது நம்பிக்கை இழந்ததால், பணத்தைத் திருப்பித் தரும்படி கேட்டேன். அவர்கள் தர மறுத்ததால் கடந்த ஜூன் 15-ம் தேதி புதுக்கோட்டை காவல்துறையில் புகார் செய்தேன். எனவே இது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு என்னை அழைத்தனர். இதற்காக கடந்த 20-ம் தேதி எல்பின் நிறுவனத்துக்குச் சென்றபோது, ராஜா உள்ளிட்டோர் என்னை வழிமறித்து அடித்து உதைத்தனர். இதில் தொடர்புடைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

அதனடிப்படையில் 'எல்பின் இ-காம்' நிறுவன உரிமையாளர் சு.ராஜா, அவரது தம்பி ரமேஷ், வழக்கறிஞர் பொன்.முருகேசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகி பிரபாகரன், அறம் மக்கள் நலச் சங்க மாநில துணைத் தலைவர்கள் ஏ.சாகுல் அமீது, டி.இளங்கோவன், எஸ்.பால்ராஜ், மாநில இணைச் செயலாளர் ஏ.அறிவுமணி, மாநில பொருளாளர் ஐ.பாபு மற்றும் சிலர் மீது 147, 148, 341, 294(பி), 323, 506 (2), 420 ஆகிய பிரிவுகளின் கீழ் கன்டோன்மென்ட் இன்ஸ்பெக்டர் விக்டர் மற்றும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து எல்பின் 'இ-காம்' நிறுவன வழக்கறிஞரான பொன்.முருகேசனிடம் கேட்டபோது, "ராஜ்குமார் முதலீடு செய்த பணத்துக்கான இரட்டிப்புத் தொகையை 10-வது மாதத்தில்தான் திருப்பித் தருவோம் என ஏற்கெனவே கூறியுள்ளோம். இதற்கான காசோலைகளையும் முன்கூட்டியே கொடுத்துவிட்டோம். ஆனால், அவர் பாதியிலேயே திருப்பிக் கேட்டார். அப்படித் தர முடியாது எனக் கூறியதால், ரவுடிகளை வைத்து மிரட்டிப் பார்த்தார். எதுவும் செய்ய முடியவில்லை என்பதால், நடக்காத ஒன்றின் அடிப்படையில் பொய்ப் புகார் கொடுத்துள்ளார். சம்பவம் நடைபெற்றதாக அவர் புகார் கூறியுள்ள நாளில், புகாருக்கு ஆளான அனைவரும் வெவ்வேறு இடங்களில் இருந்ததற்கான வீடியோ பதிவுகள் உள்ளன. நிறுவனத்தின் நற்பெயரைக் கெடுக்க வேண்டும் என்பதற்காக அளிக்கப்பட்ட பொய்ப் புகாரை சட்டப்படி சந்திப்போம்" என்றார்.

புகாரில் சிக்கியுள்ள 'எல்பின்' உரிமையாளர் சு.ராஜா, அண்மையில் பாஜக மாநிலத் தலைவர் முருகனைச் சந்தித்து தன்னை அக்கட்சியில் இணைத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x