Published : 08 Jul 2020 05:13 PM
Last Updated : 08 Jul 2020 05:13 PM

கரோனா தொற்றால் சிகிச்சை: அமைச்சர் தங்கமணியிடம் ஸ்டாலின் நலம் விசாரிப்பு

சென்னை

கரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் தங்கமணியிடம் திமுக தலைவர் ஸ்டாலின் தொலைபேசியில் நலம் விசாரித்தார். விரைவில் முழு நலத்துடன் வீடு திரும்ப வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்று காரணமாக பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். முன் களப்பணியாளர்களுடன் இணைந்து களத்தில் நிவாரணப் பணியில் இருக்கும் அரசியல் கட்சித் தலைவர்களையும் கரோனா தொற்று பாதிக்கிறது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளான அதிமுக, திமுக நிர்வாகிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன், வடசென்னை மாவட்ட முன்னாள் திமுக செயலாளர் பலராமன் உள்ளிட்டோர் கரோனா தொற்றால் உயிரிழந்தனர். பல சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டனர்.

முன்னாள் அமைச்சர் வளர்மதி உள்ளிட்டோரும் கரோனா தொற்றால் பதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.

இந்நிலையில் அமைச்சர் தங்கமணி குடும்பத்துடன் நேற்று கரோனா பரிசோதனை செய்துகொண்டதில் அவருக்கும், அவரது மகனுக்கும் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அமைச்சர் தங்கமணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்த திமுக தலைவர் ஸ்டாலின், அவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு உடல் நலம் குறித்து விசாரித்தார். இதுகுறித்து ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பான அவரின் ட்விட்டர் பதிவு:

“கரோனா வைரஸ் தொற்றினால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மின்துறை அமைச்சர் தங்கமணியைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு அவர் விரைவில் முழு நலத்துடன் வீடு திரும்ப வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தேன்.

பொதுப்பணிகளில் இருப்பவர்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்”

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x