

அதிகரித்து வரும் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பட்டாசு ஆலைகளும் நாளை (9-ம் தேதி) முதல் 19-ம் தேதி வரை சுய ஊரடங்கை கடைபிடித்து மூடப்படுகின்றன.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்ற பட்டாசு ஆலைகள், சென்னை மற்றும் நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையின் அனுமதிபெற்ற பட்டாசு ஆலைகள் என 1,070 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன.
இந்த ஆலைகளில் நேரடியாக சுமார் 3 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தொடர் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதாலும் தொழில் முடக்கத்தாலும் சிவகாசியில் பட்டாசு உற்பத்தி முடங்கிப்போய் உள்ளது. பெரும்பாலான பட்டாசு ஆலைகளில் குறைந்த அளவில் மட்டுமே உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் கரோனா வைரஸ் தொற்று காரணமாக சுய ஊரடங்கை கடைபிடித்து நாளை (9-ம் தேதி) முதல் இம்மாதம் 19-ம் தேதி வரை அனைத்து பட்டாசு ஆலைகளும் மூடப்படுவதாக தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, சங்கத்தின் தலைவர் கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுநகர் மாவட்டத்தில் கரோனை வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பட்டாசு ஆலைகளில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், பட்டாசு தொழிலாளர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் நலன் கருதியும் கரோனை வைரஸ் பரவலைக் கடுப்படுத்தும் விதமாகவும் 9-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை அனைத்து பட்டாசு ஆலைகளும் சுய ஊரடங்கை கடைபிடித்து மூடப்படும் என்று அறிவித்துள்ளார்.