

கும்பகோணம் நகராட்சியில் ஒப்பந்த துப்புரவுப் பணியாளர்கள் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கூலியைக் கேட்டு இன்று (ஜூலை 8) முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இன்று துப்புரவுப் பணியில் ஈடுபடாமல் தொழிலாளர்கள் வேலையைப் புறக்கணித்தனர்.
கும்பகோணம் நகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. நாளொன்றுக்கு 70 ஆயிரம் டன் குப்பைகள் சேகரமாகின்றன. குப்பைகளைச் சேகரிக்க தனியார் ஒப்பந்த நிறுவனத்திடம் பணியை ஒப்படைத்தனர்.
தனியார் நிறுவனம் கும்பகோணத்தில் உள்ள 250 துப்புரவுப் பணியாளர்களை நியமித்தது. அவர்களுக்குத் தினக்கூலியாக ரூ.385 தருவதாகக் கூறியது. ஆனால், தினக்கூலியாக ரூ.280 மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களாக துப்புரவுப் பணியில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள், தங்களைப் பணியமர்த்தியபோது நிர்ணயிக்கப்பட்ட கூலி ரூ.385 தர வேண்டும் எனக் கூறி தனியார் நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்து வந்தனர். இது தொடர்பாக அவ்வப்போது போராட்டங்களையும் துப்புரவுப் பணியாளர்கள் நடத்தி வந்தனர்.
இதற்கிடையில் போராட்டத்தில் ஈடுபட்ட 25 ஒப்பந்த துப்புரவுப் பணியாளர்களை தனியார் நிறுவனம் வேலையை விட்டு நீக்கியது. இதனால் கோபடமைந்த ஒப்பந்த துப்புரவுப் பணியாளர்கள் இன்று காலை பணிக்குச் செல்லாமல் நகராட்சியின் தனியார் ஒப்பந்த நிறுவன மையத்தின் முன்பாக அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு, நகரில் குப்பைகளை அள்ளாமல் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து நகராட்சி ஆணையர் லெட்சுமி, காவல் துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் மற்றும் வருவாய்த்துறையினர் ஒப்பந்த துப்புரவுப் பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், இரண்டு நாட்களில் உறுதியளித்த சம்பளத்தை தனியார் நிறுவனத்திடமிருந்து பெற்றுத் தருவதாக உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தினை பிற்பகல் விலக்கிக் கொண்டனர்.