குமரியில் மேலும் 76 பேருக்கு கரோனா: அரசு அலுவலகங்கள், சந்தைப் பகுதிகளில் அதிகரிக்கும் தொற்றால் மக்கள் அச்சம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஏற்கெனவே 800-க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 76 பேருக்கு புதிதாகத் தொற்று ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகினறனர்.
மாவட்டம் முழுவதும் இதுவரை 52,902 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் தற்போது 461 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 415 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 883 ஆக அதிகரித்துள்ளது. 8400 பேர் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குமரியில் உள்ள அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. முளகுமூடு பேரூராட்சி ஊழியருக்கு தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்த குடும்பத்தினர். நண்பர்கள் என 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குருந்தன்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அலுவலகம் மூடப்பட்டது. பெருவிளையைச் சேர்ந்த பள்ளி ஆசிரியருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
நாகர்கோவில் எஸ்.பி. அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டறையில் பணியாற்றிய போலீஸ்காரருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதனால் அவர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். போலீஸ் கட்டுப்பாட்டு அறையும் மூடப்பட்டது. கோட்டார் மார்க்கெட் வியாபாரிகள் 4 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதைப்போல் மார்த்தாண்டம் மீன் சந்தை, காய்கறி சந்தையிலும் கரோனா தொற்று பலருக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து இரு சந்தையும் மூடப்பட்டது.
குமரி மாவட்டத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி அருகே உள்ள தனியார் பள்ளியில் புதிய கரோனா வார்டு திறக்கப்பட்டுள்ளது.
