

நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் பணியாற்றும் ஊழியர்களுக்கு 'ஆர்சனிகம் ஆல்பம் 30 சி' நோய்த்தடுப்பு மாத்திரைகள் வழங்கும் நிகழ்வு இன்று தொடங்கியது.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நாகை மாவட்ட மையம் சார்பில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலகத்துடன் இணைந்து கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் இன்று நாகப்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் து.இளவரசன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இதில், ‘அரசு ஊழியர்களும் கரோனா தடுப்புப் பணிகளும்’ என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அ.தி.அன்பழகன் அனைத்துத்துறை ஊழியர்களின் பங்களிப்பு குறித்து விளக்க உரையாற்றினார். நாகை நகராட்சி ஆணையர் பி.ஏகராஜ், நகர் நல அலுவலர் டீ.பிரபு ஆகியோர் முன் கள பணியாளர்களின் சேவை குறித்து எடுத்துரைத்தார்கள்.
‘ஆர்சனிகம் ஆல்பம் 30 சி’ மாத்திரைகள், கபசுர குடிநீர் உள்ளிட்டவற்றை வழங்கி, ‘மாற்றம்... முன்னேற்றம்... மாற்று மருத்துவம்’ என்ற தலைப்பில் நாகப்பட்டினம் - திருவாரூர் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் எஸ்.பத்மநாபன் சிறப்புரையாற்றினார்.
அவர் தனது உரையில், "கரோனா நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதில் நமது பாரம்பரிய மருந்துகள் மிகச் சிறந்த பலனளிக்கின்றன. உணவே மருந்தாக பயன்படுத்தும் பாரம்பரிய முறையை நாம் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். நமது அடுப்படியில் இருக்கும் அஞ்சறைப் பெட்டியில் அனைத்து நோய்களுக்குமான மருந்துகள் உள்ளன.
எனவே, தவறாமல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் எலுமிச்சை, இஞ்சி, பூண்டு, மிளகு, சுக்கு, நெல்லிக்காய், மஞ்சள் உள்ளிட்டவற்றை அன்றாட உணவில் பயன்படுத்தி கரோனா உள்ளிட்ட அனைத்து விதமான நோய்களையும் விரட்டியடிப்போம்" என்றார்.
இந்த நிகழ்வில், இயற்கை மருத்துவர் பூங்குன்றன், ஹோமியோபதி மருத்துவர் சங்கீதா, நாகை தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் சு.சிவகுமார், ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் சொ.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.