

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் 25 பேருக்குக் கரோனா தொற்று உள்ளது கண்டறியப்பட்டது. அதில் ஒருவர் நேற்று உயிரிழந்தார். மாவட்டத்தில் கரோனா தொற்றால் நிகழ்ந்த முதல் உயிரிழப்பு இதுவாகும்.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''மாவட்டத்தில் நேற்று (ஜூலை 7) வரை 3,025 பேருக்கு சளி மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. கடந்த 6-ம் தேதி 91 பேருக்கு எடுக்கப்பட்ட சளி மாதிரியின் பரிசோதனை முடிவுகள் நேற்று கிடைக்கப்பெற்றன.
அதில் 25 பேருக்குக் கரோனா தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டது. இவர்களில் பெரும்பாலானோர் வெளிநாடு, வெளியூர்களிலிருந்து வந்தவர்கள். ஏற்கெனவே தொற்று கண்டறியப்பட்ட நபரிடமிருந்து 11 பேருக்குத் தொற்று பரவியுள்ளது தெரியவந்துள்ளது.
இதய நோய், சளி, நுரையீரல் பிரச்சினைகள் காரணமாக காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த 60 வயது நபர் 7-ம் தேதி உயிரிழந்தார். அவருக்கு கரோனா தொற்று இருப்பது இன்று வந்த பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது. அவரின் உடலை உரிய முறையில் அடக்கம் செய்வதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். பொது இடங்களிலும், தனியிடங்களிலும் கண்டிப்பாக சமூக இடைவெளியக் கடைப்பிடிக்க வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும். வெளியிடங்களிலிருந்து அவசியமற்ற தேவைகளுக்காக காரைக்கால் மாவட்டத்தினுள் மக்கள் வருவதை தடுக்கும் வகையில் மாவட்ட எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்பு தீவிரமாக மேற்கொள்ளப்படும்''.
இவ்வாறு ஆட்சியர் அர்ஜூன் சர்மா என்றார்.
நலவழித்துறை நோய்த் தடுப்புப் பிரிவு துணை இயக்குநர் டாக்டர் கே.மோகன்ராஜ் கூறுகையில், ''இன்று 25 பேருக்குக் கரோனா தொற்று உறுதியான நிலையில் ஒருவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டார். அவர் அனுமதிக்கப்பட்டிருந்த வார்டு சுத்தப்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 24 நபர்கள் வெளிநாடு, வெளி மாநிலங்களிலிருந்து வந்தோர், திருநள்ளாறு பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி பெண், சளி நோய்க்காக அனுமதிக்கப்பட்டவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காரைக்கால் வயல்கரை வீதியில் ஏற்கெனவே தொற்று உறுதி செய்யப்பட்ட ஒருவருடன் தொடர்பில் இருந்த 11 பேர் உள்ளிட்டோரும் அடங்குவர்.
தற்போது காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் 32 பேர் கரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் உடல்நிலை சீராக உள்ளது. சளி, ஜுரம், மூச்சுத் திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுக வேண்டும். அப்போதுதான் தொற்று பரவுவதை உடனடியாகத் தடுக்க முடியும். இப்படிப்பட்ட அறிகுறி இருந்த ஒருவர் சில நாட்கள் தாமதித்த காரணத்தால்தான் அவரிடமிருந்து 11 பேருக்குத் தொற்று பரவியுள்ளது, அதனால் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுக வேண்டியது அவசியம்'' என்றார்.