

மின்துறை அமைச்சர் தங்கமணிக்குக் கரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஊர்க்காவல் படையைச் சேர்ந்த கூடுதல் டிஜிபிக்கும் தொற்று உறுதியானதை அடுத்து அவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் கரோனா தொற்று பரவினாலும் நிவாரணப் பணி, அரசுப் பணிகளில் திராவிடக் கட்சிகளான திமுக, அதிமுகவைச் சேர்ந்த தலைவர்கள் மக்களை நேரடியாகச் சந்தித்து, செயல்பட்டு வருகின்றனர்.
இதில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளிலும் அமைச்சர், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுகவைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் பழனி, சதன் பிரபாகர், குமரகுரு, திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் வசந்தம் கார்த்திகேயன், ஆர்.டி.அரசு, மஸ்தான், தங்க பாண்டியன் உள்ளிட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். கடந்த 2 நாட்களுக்கு அம்மன் அர்ச்சுணன், பா.வளர்மதி ஆகியோருக்கும் கரோனா தொற்று உறுதியானது.
இதில் ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ பழனி சிகிச்சையில் குணமான நிலையில், நேற்று வீடு திரும்பினார்.
இந்நிலையில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று அவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அமைச்சர் தங்கமணிக்கும் அவரது மகனுக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர்கள் ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று மத்திய மின்சாரத்துறை அமைச்சர், முதல்வர் பழனிசாமியைச் சந்தித்த நிலையில் அமைச்சர் தங்கமணியும் அந்நிகழ்வில் கலந்துகொள்வதாக இருந்தது.
அமைச்சர் தங்கமணி நேற்று முதல்வர் பழனிசாமியுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. கடந்த சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை துறைச் செயலர்கள், மின்துறை உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் தங்கமணி ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளார். ஐசிஎம்ஆர் விதிப்படி அவருடன் தொடர்பில் இருந்த அனைவரையும் பரிசோதிக்க சுகாதாரத்துறை முடிவெடுத்துள்ளது.
இதேபோன்று காவல்துறை கூடுதல் டிஜிபி ஒருவருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
ஊர்க்காவல்படை கூடுதல் டிஜிபியாக இருப்பவர் ராஜீவ்குமார். இவரது மனைவிக்கு சமீபத்தில் கரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் இவரும் பரிசோதித்துக் கொண்டார். அதில் அவருக்கும் கரோனா தொற்று உறுதியான நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.