Published : 08 Jul 2020 12:42 PM
Last Updated : 08 Jul 2020 12:42 PM

ரூ.45 லட்சம் பணம் கையாடல் விவகாரம்: விஷால் அலுவலகப் பெண் ஊழியர் மீது போலீஸ் வழக்குப்பதிவு

சென்னை

நடிகர் விஷால் அலுவலகப் பெண் கணக்காளர் ரூ.45 லட்சம் மோசடி செய்து தலைமறைவான விவகாரத்தில், விருகம்பாக்கம் போலீஸார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர்.

விஷால் பிலிம் ஃபேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனத்தை விஷால் நடத்தி வருகிறார். இந்நிறுவனம் மூலம் பல படங்களைத் தயாரித்துள்ளார். விரைவில் வெளியாகவுள்ள 'சக்ரா' படத்தையும் இந்த நிறுவனமே தயாரித்துள்ளது.

இந்நிறுவனம் தொழிலாளர்களுக்குக் கட்டவேண்டிய கோடிக்கணக்கான ரூபாய் டிடிஎஸ் தொகையைக் கட்டவில்லை என விஷால் மீது எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த விவகாரங்களைக் கவனித்து வந்த பெண் கணக்காளர் ரம்யா, தொழிலாளர் டிடிஎஸ் தொகையில் ரூ.45 லட்சத்தை முறைகேடாக தனது உறவினர் வங்கிக்கணக்கில் மாற்றிக்கொண்டு தலைமறைவானதாகப் புகார் எழுந்தது.

இதுகுறித்து விஷால் பிலிம் ஃபேக்டரி தயாரிப்பு நிறுவனத்தின் மேலாளர் ஹரிகிருஷ்ணன் கடந்த 3-ம் தேதி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அவரது புகாரில் கணக்காளர் ரம்யா பணம் கையாடல் செய்ததாகத் தெரிவித்திருந்தார்.

அந்தப் புகாரில், 2015-ம் ஆண்டு முதல் விஷால் பிலிம் ஃபேக்டரி நிறுவனத்தில் ரம்யா என்பவர் கணக்காளராகப் பணிபுரிந்து வருவதாகவும், விஷால் பிலிம் ஃபேக்டரி சார்பில் சில ஆண்டுகளாக வருமான வரித்துறைக்குச் செலுத்தச் வேண்டிய டிடிஎஸ் தொகையை அவர் செலுத்தவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் டிடிஎஸ் தொகையினை தனது கணக்கிலும், கணவர், உறவினர் கணக்கிலும் பரிமாற்றம் செய்துவிட்டு, நிறுவனத்திடம் டிடிஎஸ் தொகையினைக் கட்டிவிட்டதாகப் போலி ஆவணங்களையும், வங்கி விவரங்களையும் காட்டி மோசடி செய்ததாகப் புகார் மனுவில் ஹரிகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.

இதுதவிர அலுவலக இ-மெயில் முகவரி மற்றும் அலுவலக கணினியில் உள்ள முக்கியமான ஃபைல்களை அழித்துவிட்டதாகவும், தினசரி வரவு-செலவுக் கணக்குகளிலும் ரம்யா முறைகேடு செய்துள்ளதாகவும் ஹரிகிருஷ்ணன் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறு ரம்யா மோசடி செய்த தொகை சுமார் ரூ.45 லட்ச ரூபாய் வரை இருக்கும் எனவும், இது தொடர்பாக ரம்யாவிடம் கேட்டபோது முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்ததாகவும், ஜூன் 28-ம் தேதி அனைத்துக் கணக்கு வழக்குகளையும் ஒப்படைப்பதாகக் கூறிவிட்டு தலைமறைவாகி விட்டதாகவும் புகாரில் தெரிவித்திருந்தார்.

ஹரிகிருஷ்ணனின் புகாரைப் பெற்ற போலீஸார் அதுகுறித்து விஷால் அலுவலக ஊழியர்கள், சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலாளர் அளித்த ஆவணங்கள், இ-மெயில் உள்ளிட்ட ஆதாரங்களை ஆய்வு செய்தனர்.

பின்னர் இது தொடர்பாக தலைமறைவாக உள்ள பெண் கணக்காளர் ரம்யா மீது ஐபிசி 408 (கணக்காளர் அல்லது அலுவலக ஊழியராக இருந்து நம்பிக்கை மோசடி செய்தல்) , 420 (நம்பிக்கை மோசடி), 468 (ஏமாற்றுவதற்காக பொய்யான ஆவணத்தைத் தயாரித்தல்), 471 (பொய்யாகப் புனையப்பட்டதை உண்மையானது என உபயோகப்படுத்துதல்) ஆகிய 4 பிரிவுகளில் விருகம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தலைமறைவான ரம்யாவைத் தேடி வருகின்றனர். ரம்யா தவிர அவரது கணவர் மற்றும் உறவினர்களுக்கு இந்த மோசடியில் தொடர்பிருந்தால் அவர்கள் மீதும் வழக்குத் தொடரப்படும் எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x